

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் மோகனை இன்று காலை சந்தித்து நலம் விசாரித்த திருச்சி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ். (இடது); கைது செய்யப்பட்டவர்கள் (வலது)
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தீபாவளியன்று நள்ளிரவு இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (17), விஷால் (17) ஆகிய இரண்டு சிறார்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியை இச்சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
காதல் தகராறு காரணமாக நடைபெற்ற இக்கொலை வழக்கில் ராகுல், விஷால் ஆகியோரின் உறவினர்களான சமயபுரம் சோலை நகரைச் சேர்ந்த கிருபாகரன் (19), ஹரிஹரன் (22), இனாம் சமயபுரம், சோழன் நகரைச் சேர்ந்த சிவனேசன் (21), லால்குடி வட்டம் மருதூர், காமராஜர் நகரைச் சேர்ந்த சரவணன் (18), மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த தற்போது சமயபுரம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கெனி வின்ஸ் (19), ரெனிசன் (20) உள்ளிட்ட 6 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராகுலுக்கும், குற்றவாளி கெனிக்கும் இடையே ஒரு சிறுமியுடனான பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரட்டைக் கொலையில் முடிந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கரியமாணிக்கம் பிரிவு சாலைக்கு குற்றவாளிகளில் ஒருவரான சிவனேசன் (20) என்பவரை போலீஸார் இன்று அதிகாலை அழைத்துச் சென்றனர்.
அப்போது சிவனேசன் அங்கிருந்த கற்கள் மற்றும் ஆயுதங்களால் போலீஸாரை தாக்கினார். இதில் போலீஸாரின் ஜீப் கண்ணாடி நொறுங்கியது. அரிவாளை எடுத்து காவலர் மோகன் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற சிவனேசனை சமயபுரம் ஆய்வாளர் குணசேகரன் துப்பாக்கியால் சுட்டதில் சிவனேசன் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த காவலர் மோகன் மற்றும் குற்றவாளி சிவனேசன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் இன்று காலை 9 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் மோகனை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து அவரை பாராட்டினார்.
பின்னர் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கில் ராகுல், கெனி இருவரும் ஒரு சிறுமியை காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை காதலிக்கக் கூடாது என ராகுலை கெனி கண்டித்துள்ளார். இந்த முன் விரோதத்தில் கெனி உள்ளிட்ட ஆறு பேரும் சேர்ந்து ராகுலை கொலை செய்துள்ளனர். அப்போது அவருடன் இருந்த விஷாலும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக சிவனேசனை அழைத்துச் சென்றபோது அவர் காவலர்களைத் தாக்கி விட்டு தப்ப முயன்றபோது ஆய்வாளர் குணசேகரன் அவரை சுட்டுப் பிடித்தார். இதில் காவலர் மோகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய கெனி வின்ஸ் மீது 5 வழக்குகளும், ரெனிசன் மீது 4 வழக்குகளும், சிவனேசன் மீது ஒரு அடிதடி வழக்கும் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.