

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் - கமலாம்மாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு ஆகிய மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய மகள்களும் என 4 பிள்ளைகள். இதில் தனது மூத்த மகள் சாந்தி பெயரில் சாந்தி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய சிவாஜி கணேசன், சென்னை அண்ணா சாலையில் கட்டிய திரையரங்குக்கும் அவரது பெயரையே வைத்தார்.
சாந்திக்கு, நாராயணசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விஜி லக் ஷ்மி, சத்யவதி ஆகிய மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த சாந்தி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
அவர் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடிகர்கள் சிவகுமார், ராதாரவி, இயக்குநர் பி.வாசு உள்பட திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.