SIR | வேலூர் மாவட்ட 5 பேரவை தொகுதிகளில் 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

SIR | வேலூர் மாவட்ட 5 பேரவை தொகுதிகளில் 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) முடிவுற்ற நிலையில் நாளை மறுதினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தற்போதுள்ள பட்டியலில் உள்ள 13.03 லட்சம் வாக்காளர்களில் சுமார் 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கியது. இந்த பணிகள் டிச. 4-ம் தேதியுடன் முடிவுடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் டிச. 11-ம் தேதி என்றும், பிறகு டிச. 14-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது. தற்போது, எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் டிச.19-ம் தேதி (நாளை மறுதினம்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவுற்றுள்ளன. அக்.27-ம் தேதி அன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளர்கள் இருந்தனர். 1,314 வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப்பெறும் பணியும் நடைபெற்றன. இவற்றை வாக்குச்சாவடி அலுவலர்களின் கைபேசி செயலி வழியாக பதிவேற்றம் செய்யும் பணி இரவு, பகலாக நடைபெற்றன. வாக்காளர்களால் பூர்த்தி செய்து திரும்ப அளிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த வாக்காளர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் படிவங்கள் குறித்து மீண்டும் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன. உரிய விசாரணைக்குப் பிறகே வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள எஸ்.ஐ.ஆர் திருத்த பணியில் சுமார் 10 லட்சத்து 88 ஆயிரம் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 3.44 லட்சம் வாக்காளர் பதிவாகியுள்ளனர். இவர்களின் உறவினர்கள் என்ற அடிப்படையில் சுமார் 7.22 லட்சம் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

எஸ்.ஐ.ஆர் ஆய்வில் உயிரிழந்தவர்கள் 48 ஆயிரம் பேரும், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் சுமார் 72 ஆயிரம் பேரும், இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் 10 ஆயிரம் பேரும், முகவரியில் இல்லாத வாக்காளர்கள் சுமார் 84 ஆயிரம் பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து ஏறக்குறைய 2.15 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், குடியாத்தம் தனி தொகுதியில் சுமார் 58 ஆயிரம் பேரும், வேலூர் தொகுதியில் சுமார் 54 ஆயிரம் பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும், காட்பாடி தொகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர், அணைக்கட்டு தொகுதியில் சுமார் 36 ஆயிரம் பேர், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் சுமார் 29 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், மாவட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 10.88 லட்சம் வாக்காளர்களில் 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உறவினர் தொடர்பு இல்லாத சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு டிச.19ம் தேதிக்கு பிறகு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆவணங்களை சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR | வேலூர் மாவட்ட 5 பேரவை தொகுதிகளில் 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
இளம் கில்லிகள் என்ட்ரி... சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார் யார்? | ஐபிஎல் மினி ஏலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in