

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனை முன்னிட்டு அபுதாபியில் மினி ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவர்களில் நான்கு பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
வழக்கமாக சிஎஸ்கே அணி அனுபவ வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கும். இப்போது அந்த யுக்தியை முற்றிலுமாக மாற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஏலத்தில் சிஎஸ்கே செயல்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அதிகம் நிறைந்த அணியை கட்டமைக்க சிஎஸ்கே விரும்புகிறது.
ஏற்கெனவே அணியில் ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், நூர் அகமது உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டுள்ள சிஎஸ்கே அணி, ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீர் ஆகியோர்களை தலா ரூ.14.20 கோடி தொகைக்கு வாங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் இவர்கள் இருவரும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் கில்லி என தகவல். சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாதவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
அணியின் தேவையாக கருதப்படும் உள்நாட்டு சுழற்பந்து வீச்சாளராக ராகுல் சஹரை ரூ.5.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது. அமன் கான் எனும் ஆல்ரவுண்டரை ரூ.40 லட்சத்துக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது.
4 வெளிநாட்டு வீரர்களை அடிப்படை தொகைக்கு வாங்கிய சிஎஸ்கே:
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹோசைன், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட், நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஸாக் பவுல்க்ஸ் ஆகியோரை சிஎஸ்கே வாங்கியுள்ளது.
சர்ஃபராஸ் கான்: முதல் சுற்றில் ஏலத்தில் வாங்கப்படாமல் இருந்த சர்ஃபராஸ் கானை இரண்டாவது சுற்றில் வாங்கியது சிஎஸ்கே. அவரது அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்துக்கு சிஎஸ்கே வாங்கியது.
நடப்பு சையது முஷ்தாக் அலி தொடரில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இதற்கு முன்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளில் சர்ஃபராஸ் கான் விளையாடி உள்ளார். சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் அனுபவ பேட்ஸ்மேனாக அவர் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.