

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் சார்பில், கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மகளிர் மட்டும் பங்கேற்ற 'சிங்கப்பெண் மாரத்தான்' சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலை வலியுறுத்தவும் சென்னை தீவுத்திடலில் நேற்று ‘சிங்கப்பெண் மாரத்தான் 2026’ நடைபெற்றது.
இதில் சுமார் 3,000 பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல், மாவட்டம் 323-க்கு உட்பட்ட இன்னர்வீல் கிளப்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்புப் படை இணைந்து மகளிர் மட்டுமே பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தின.
8 கிலோமீட்டர் ஓட்டம்
நேற்று (9-ம் தேதி) காலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் இருந்து மாரத்தான் தொடங்கியது. அங்கிருந்து மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று, மீண்டும் தீவுத்திடலுக்கு திரும்பும் வகையில் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓட்டம் நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள், பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த பெண் போலீஸார் உட்பட சுமார் 3,000 பேர் இதில் பங்கேற்றனர்.
சிங்கப்பெண் சிறப்புப் படையின் தலைவரும், போலீஸ் ஐ.ஜி.யுமான கே.பவானீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஓட்டத்தின் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தடுப்பூசி மூலம் நோயைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு
நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பெண்களின் பாதுகாப்பையும் அதிகாரமளித்தலையும் ஒருசேர வலியுறுத்துவதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.
சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த பெண் போலீஸார் பொதுமக்களுடன் இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றதன் மூலம், பெண்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.
பெண்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பாக இருக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் சிங்கப்பெண் சிறப்புப் படை உறுதியாக செயல்படும் என்ற நம்பிக்கையையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
மேலும், பெண்கள் அவசர காலங்களில் போலீஸாரின் ‘1091 உதவி எண்ணை’ பயன்படுத்தி உதவி பெறலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.