“பொது எதிரியை வீழ்த்துவதே நோக்கம்” - அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் நேர்காணல்
அதிமுகவில் 2008-ம் ஆண்டிலிருந்து பயணிக்கும் சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, அவரால் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மாணவரணி மாநில செயலாளராக இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மாவட்டங்கள்தோறும் பயணித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான பணிகளுக்கிடையே ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்:
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு அதிமுக மாணவரணி கடமையை முடித்துக்கொண்டதா?
நாங்கள் ஆர்ப்பாட்டத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முன்பு நின்று மேல்நிலைக் கல்வி அளவிலேயே லேப்டாப் கொடுத்தால்தான் முழு பயன் கிடைக்கும். அதனால் மாணவர்கள் பள்ளி அளவில் லேப்டாப் கொடுக்க திமுக அரசை வலியுறுத்த வேண்டும் என்று துண்டு பிரசுங்கள் விநியோகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.
லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்களை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுவது போட்டோ ஷூட்டுக்காக தான் என திமுகவினர் மத்தியில் விமர்சனம் இருக்கிறதே?
52.35 லட்சம் லேப்டாப்களை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, அதில் பயன்பெற்று, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மாணவர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அது அதிமுக அரசின் வெற்றி கொண்டாட்டம். இதை போட்டோ ஷூட் என்று சொல்லும் திமுக, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லேப்டாப் கூட கொடுக்கவில்லை. அதனால் திமுகவுக்கு அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்லை.
நவோதயா பள்ளியை தமிழகத்தில் கொண்டுவரும் விவகாரத்தில் அதிமுக- பாஜக முரண்பட்டுள்ள நிலையில், 2026 தேர்தலில் இந்த கூட்டணியை மக்கள் ஏற்பார்களா?
கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதை எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி தெளிவாக விளக்கி விட்டார். கூட்டணியில் இருந்த போது கூட காவிரி விவகாரத்தில் மக்களவையை முடக்கினோம். கூட்டணியில் இருந்தாலும், தமிழக நலனை ஒருபோதும் அதிமுக விட்டுக் கொடுக்காது. கூட்டணி அமைப்பதன் நோக்கமே பொது எதிரியை வீழ்த்தவும், வெற்றிக்காகவும் தான்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க மாணவரணி எத்தகைய பங்களிப்பை அளிக்கப்போகிறது?
'மாற்றத்துக்கான இளைஞர்களின் குரல்' என்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தோம். அதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டும், தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். கழக மாணவரணி சார்பில் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக, அவர்களை சந்தித்து ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தீவிர பணியாற்றி வருகிறோம்.
கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்திருக்கும் அதிமுகவில், தாய்மொழி, பகுத்தறிவு, திராவிடம், இலக்கியம் சார்ந்து முன்னெடுப்புகளை மாணவரணி மேற்கொண்டதாக தெரியவில்லையே?
கழக மாணவரணி சார்பில் இளம் பேச்சாளர் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடத்தப்பட்டது. அதில் மேற்குரிய அனைத்தும் கற்பிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களாக சென்று பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில் மேடைப்பேச்சு, உடல் மொழி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 114 திறன் பெற்ற இளம் பேச்சாளர்களை உருவாக்கி இருக்கிறோம்.
திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள், திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என அதன் கூட்டணி கட்சிகள் உறுதியாக நம்புவதை எப்படி பார்க்கிறீர்கள்?
திமுக உறுதியாக ஆட்சிக்கு வராது. அதிமுக ஆட்சியில் ஒரு வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.200 ரூபாய் செலுத்தப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் ரூ.1500 செலுத்த வேண்டியுள்ளது. மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்று அறிவித்துவிட்டு, ஆட்சி முடியும் வரை கூட அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என அறிவித்தனர். ஆனால் இரண்டரை ஆண்டுகள் கழித்து, அதுவும் அதிமுகவின் அழுத்ததால் வேறு வழியின்றி செயல்படுத்தினர். அதிலும் அனைவருக்கும் கொடுக்கவில்லை. மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் என்றார்கள். அத்தகைய பேருந்துகள் அவ்வளவாக வருவதில்லை. வந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று தமிழகம் முழுதும் பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருக்கிறதே?
கடந்த ஆட்சியில் ரூ.2500 கொடுக்கும்போது, ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படி எனில் இவர், இவரது ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டில் இவர் கொடுக்கவே இல்லை. 2023, 2024-ல் எம்பி தேர்தலையொட்டி பணம் கொடுத்தார். 2025-ம் ஆண்டு கொடுக்கவே இல்லை. இப்போது 2026 தேர்தலை மனதில் வைத்து ரூ.3 ஆயிரம் அறிவிக்கிறார். இது மக்கள் நலன் கருதி அறிவிக்கப்படவில்லை. தேர்தலை மனதில் வைத்து, வாக்கு அறுவடைக்காக அறிவித்திருக்கிறார். இதை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இவரது ஏமாற்று வேளைக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
