திடீர் குழப்பத்தில் திமுக கூட்டணி: எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின்?

திடீர் குழப்பத்தில் திமுக கூட்டணி: எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின்?
Updated on
2 min read

“எத்தனை எதிரிகள் வந்தாலும் எங்களை அசைத்துப் பார்க்கமுடியாது” எனச் சொல்லிக் கொண்டே இருந்த திமுக கூட்டணியின் மீது கண் பட்டுவிட்டது போலிருக்கிறது. உள்ளே இருக்கும் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான கருத்துகளை பேச ஆரம்பித்திருப்பதால் கூட்டணிக்குள் சலனப் புயல் வீச ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 2-ம் தேதி திருச்சியில் இருந்து சமத்துவ நடைபயணம் தொடங்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் ஆஜராகி இருந்த நிலையில், காங்கிரஸ் புறக்கணித்து விட்டது. விழாவுக்கான அழைப்பிதழில் பிரபாகரன் படம் அச்சாகி இருந்ததே அதற்குக் காரணம் எனச் சொல்கிறது காங்கிரஸ். இதுகுறித்து துரை வைகோ தன்னிலை விளக்கம் தந்த பிறகும் சமாதானம் அடையவில்லை காங்கிரஸ். இது இரண்டு கட்சியினருக்குக்குள்ளும் மனஸ்தாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு, ”கடன் வாங்கியதில் உபியை மிஞ்சிவிட்டது தமிழ்நாடு” என்று காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட நெருப்புக்கு கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக உள்ளிட்ட அனைவரும் ஒருசேர கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், “காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? கூட்டணிகள் பரஸ்பர மரியாதை யின் அடிப்படையில் உருவாகின்றன; பொது அழுத்த அரசியலால் அல்ல. துரை வைகோவும், திருமாவளவனும் கூட்டணி கட்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லட்சுமண ரேகையை மதிக்க வேண்டும் என தங்களின் நிர்வாகிகளுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று சூடானது ஒட்டுமொத்த கூட்டணிக்குள்ளும் சலசலப்பை உண்டாக்கியது.

இதேபோல், “கடந்த 2011-ம் ஆண்டு போல் விசிக​-வும் பாமக-​வும் ஒரே கூட்​டணி​யில் இருக்கவேண்​டும்” என தனது அபிப்பிராயத்தைச் சொன்னார் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை. இதற்கு கடுமையாக் எதிர்வினையாற்றிய விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, “விசிக​-வுக்கு தலைவர் செல்​வப்​பெருந்​தகை இல்லை. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மிக உரிமையும் இல்​லை. பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிவிட்ட நிலை​யில், பாமக-வுடன் சேருங்​கள் எனச் சொல்​வது செல்வப்பெருந்தகையின் வேலை​யல்ல.

பாஜக​-வும், காங்கிரஸும் சேரவேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா?” என்று காட்டமான கேள்வியை முன்வைத்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்குள் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சிக் குள்ளேயே, விஜய்யுடன் போகலாம் என்று ஒரு அணியும், திமுக-வுடனேயே இருந்துவிடலாம் என ஒரு அணியும் கிளம்பி இருப்பதால் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. இப்படியே போனால், காங்கிரஸ் இன்னொரு பிளவை சந்தித்தாலும் ஆச்சரியமில்லை என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது அந்தக் கட்சியின் உள்வட்ட நிலவரம்.

இந்த நிலையில் ஒருவேளை பாமக உள்ளே வந்தால் அவர்களுக்கான இடங்களை பிரித்துக் கொடுப்பதிலும் திமுக-வுக்கு பெரும் தலையிடி காத்திருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கும் தொகுதிகளைப் பங்கிட்டுத் தரவேண்டிய பொறுப்பும் இருப்பதால் தொகுதிப் பங்கீடுகளை சுமுகமாக பேசி முடித்தாலே ‘அப்பாடா’ நிம்மதி தான் திமுக-வுக்கு!

திடீர் குழப்பத்தில் திமுக கூட்டணி: எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின்?
“திமுக ஆட்சியை எப்படியாவது ஒழித்துக் கட்டுவோம்” - அமித் ஷா ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in