

தமிழக காவல் துறையில் எஸ்ஐ பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்துக்கு வெளியே வரிசையில் காத்திருந்த பட்டதாரிகள்.
சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் (எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. முன்னதாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி துறை ஒதுக்கீடு மற்றும் பொது ஒதுக்கீடு பிரிவினருக்கு ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 46 மையங்களில், 145 இடங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணபித்திருந்த நிலையில், 1 லட்சத்து 78,390 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அதில் 30 சதவீதம் பேர்தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 வரை தமிழ் தகுதித் தேர்வும் நடைபெற்றது. இந்த முறை தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி மதிய உணவுக்காக தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தேர்வில் காவல் துறையில் பணியாற்றுவோருக்கு 260 இடங்கள் (20 %) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னையில் 9 மையங்களில் 22 இடங்களில் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதலே வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர் பின்ஒருவராக பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு அனுமதிக்கப் பட்டனர். மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லவும் முழுக்கை சட்டையை மடக்கி வைக்கவும், பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
சென்னையில் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், எஸ்பி-க்கள் ஆய்வு செய்தனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக உடல் உறுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன் பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.