

சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் கிறிதுஸ்மஸ் திருவிழா சிறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: “சேகர் பாபு அவர்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர். ஆனால், அவர் ரம்ஜானையும் சிறப்பாகக் கொண்டாடுவார், கிறிஸ்துமஸையும் சிறப்பாகக் கொண்டாடுவார். கிறிஸ்துமஸ் என்று சொன்னால், வண்ண விளக்குகள், நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் என எங்குப் பார்த்தாலும் வெளிச்சமாக, கொண்டாட்டமாக, மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் கிழக்கு மாவட்டத்திற்கு எப்பொழுதுமே கூடுதல் சிறப்பாக இருக்கும், கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று இந்த நிகழ்ச்சியும் வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய திராவிட மாடல் அரசைப் போல அனைவருக்கும் பயனுள்ளதாக, அத்தனை பேருக்கும் ஒரு நல்ல விஷயத்தைச் செய்து கொடுக்கிற நல்ல விழாவாக இன்று இந்தச் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மீண்டும் இந்தித் திணிப்பைத் தமிழ்நாட்டிற்குள் திணிக்கப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். வழக்கத்திலேயே இல்லாத, யாருமே பேசாத சமஸ்கிருதத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மிடம் திணிக்கிறார்கள். குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் தமிழ்நாடு மீது திணிக்கப் பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறை என்று சொல்லி, நம்முடைய மாநிலத்தின் உரிமைகளைக் குறைக்கப் பார்க்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் அபாயத்தையும் நம் முதலமைச்சர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக எடுத்துச் சொன்னார். சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை எல்லாம் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பாசிஸ்டுகள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
நாம் நினைத்தது போன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 98 லட்சம் மக்களின் வாக்குகளை நீக்கியிருக்கிறார்கள். குறிப்பாகச் சென்னை மாவட்டத்தில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. நான் உங்களிடம் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில், இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் உங்கள் அத்தனை பேரிடமும் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள், இங்கே வருகை தந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய வாக்குகள் இருக்கின்றனவா என்று நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். அது நம்முடைய கடமை. அது நம்முடைய கடமை மட்டும் கிடையாது, அது நம்முடைய உரிமை. அப்படி உங்களின் வாக்குகள் இல்லை என்றால், கழகத்தின் பி.எல்.ஏ-2 உறுப்பினர்களை சந்தித்து ‘படிவம்-6’-ஐ கொடுத்து மறுபடியும் விண்ணப்பம் செய்தாக வேண்டும். வருகின்ற ஜனவரி 18-ஆம் தேதி வரை நமக்கு கால அவகாசம் இருக்கிறது.
இன்று இவ்வளவு சூழ்ச்சிகளை ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது திணித்துக் கொண்டிருக்கும்போது, நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாகச் சிறுபான்மையினர் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்துள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மாணவர்களுக்கு ரூபாய் 7 கோடி அளவுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கல்வி உதவித் தொகையை மட்டும் நம்முடைய அரசு வழங்கியுள்ளது. கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு மானியமாக 13 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார் நம் முதலமைச்சர். அதேபோன்று ஜெருசேலத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் 37 ஆயிரம் ரூபாய் மானியம் இன்றைக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. தேவாலயங்களைப் புதுப்பிப்பதற்கு, இதுவரை ஐந்து கோடி ரூபாய் வரை சிறப்பு நிதியாக நம் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வுக் குழுவில் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளே ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது பல வருடக் கோரிக்கை. ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாகச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்கின்ற பாதிப்பை உணர்ந்து, மாநில அரசின் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருந்து, அவற்றை நம் அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், 1,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படிச் சிறுபான்மை மக்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பதற்கு நம்முடைய அரசு தயாராக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இன்று ஒன்றிய பாசிச அரசு எவ்வளவோ சூழ்ச்சிகள் எல்லாம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சி என்றைக்குமே தமிழ்நாட்டில் வெற்றிபெறாது. அதற்குக் காரணம் நம்முடைய தலைவர் உருவாக்கி வைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான்.
இது ஏதோ தேர்தலுக்காக உருவாக்கிய கூட்டணி கிடையாது. நம் கூட்டணி கொள்கைக் கூட்டணி என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதனால்தான் இன்று அதிமுக-வின் கூட்டணியை நாம் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூடச் சொல்லமுடியாது. அது ஒரு முதலாளிக்கும், அடிமைக்குமான ஒரு கூட்டணியாக மாறிக்கொண்டிருக்கிறது.
மத நல்லிணக்கத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிரான பாசிஸ்டுகளின், அடிமைகளின் அந்தக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் முறியடித்துக் காட்டுவார்கள். ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்றைக்குமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு அரணாக நிச்சயமாக இருக்கும்.
எனவே வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக திரு.வி.க நகரில் மிகப்பெரிய வெற்றியை, நீங்கள் அத்தனைபேரும் நிச்சயமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” இவ்வாறு உதயநிதி பேசினார்.