நாகை தொகுதி யாருக்கு? - திமுக கூட்டணியில் போட்டாபோட்டி

நாகை தொகுதி யாருக்கு? - திமுக கூட்டணியில் போட்டாபோட்டி
Updated on
1 min read

நாகப்பட்டினம்: முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றான நாகை தொகுதியில் இந்த முறை போட்டியிட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

தற்போது விடுதலை சிறுத்தைகள் வசம் உள்ள இந்தத் தொகுதியை, இந்த முறையும் தங்களது விருப்பப் பட்டியலில் விசிக கேட்டுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏவான ஆளூர் ஷாநவாஸ் மீண்டும் போட்டியிடுவார் என்கிறார்கள்.

ஆனால் கடந்த முறை சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்ததாலும், திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன் தனக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதாலும், வேறு பாதுகாப்பான தொகுதிக்கு மாறலாமா என்று ஷாநவாஸ் யோசிக்கிறாராம். ஆனாலும் விசிகவோ எக்காரணம் கொண்டும் தொகுதியை விட்டுவிடத் தயாராக இல்லை.

இது இப்படியிருக்க இந்த தொகுதியை இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்டுள்ளதாம். கம்யூனிஸ்ட் கட்சியினர் கணிசமாக உள்ள இத்தொகுதியில் பலமுறை இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதனால் இம்முறை தங்களுக்கு வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கிறதாம். அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அவருக்காக நாகை தொகுதியை அக்கட்சி கேட்டுள்ளது என்கிறார்கள். இதற்கு பதிலாக வேறு தொகுதியை திமுக எடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தொடர்ந்து தொகுதியை கூட்டணிக்கே கொடுத்து வருவதால் கட்சிக்காரர்கள் சோர்ந்து இருக்கிறார்கள் என்றும், எனவே, இந்த முறை கூட்டணிக்கு கொடுக்கக்கூடாது, அதிலும் எதிர்முனையில் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படுவதால் அதை சமாளிக்க, திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என்று திமுகவில் குரல்கள் வலுவாக எழுந்துள்ளன.

திமுக மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவருமான கவுதமன் உள்ளிட்ட பலர் இங்கு போட்டியிட விரும்புகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டவர்கள் மூலம் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்கிறார்கள். இவைதவிர காங்கிரஸ் கட்சியும் நாகை தங்களுக்கு வேண்டும் என கேட்டுள்ளதாம்.

இப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாகையில் போட்டியிட போட்டாபோட்டி போடுகின்றன. ஆனால் கூட்டணி சூழல்கள் இயல்பாக இல்லாத நிலையில், யாருக்கு கொடுத்தாலும் மற்ற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும் என்பது மட்டும் உறுதி.

நாகை தொகுதி யாருக்கு? - திமுக கூட்டணியில் போட்டாபோட்டி
தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in