

முதல்வர் விஜய்
சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்ட பலர் தவெகவில் நேற்று இணைந்தனர். அப்போது, உங்களது உழைப்பையும், விசுவாசத்தையும் நமது கட்சியிலும் காட்ட வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். தொடர்ந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இணைப்பு விழாவில் பல முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணைந்தனர்.திமுகவின் முக்கிய முகமாக அறியப்படும் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் இணைந்தனர். இதேபோல் நடிகர்கள் ரவி மரியா, பஷீர், அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
இணைப்பு விழா நடந்து கொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில், முதல்வர் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு ஏற்கெனவே, விஜய்யின் வருகைக்காக காத்திருந்த, தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது, விஜய் பேசியதாவது: நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ளீர்கள். உங்கள் உழைப்பை நான் அறிவேன். அதே உழைப்பையும் விசுவாசத்தையும் நமது கட்சியிலும் காட்ட வேண்டும். மக்கள் பணி மட்டுமே நமக்கு முக்கியம். அதற்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உங்களின் உத்வேகமான செயல்பாடுகள் தொடரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகை செல்வன் கூறுகையில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போலத் தமிழகத்துக்கு ஒரு தகுதியான தலைவராக விஜய் கிடைத்துள்ளார். அதிமுக தற்போது தவறான தலைமையிடம் சிக்கியுள்ளது. அந்த மனவேதனையால்தான் அங்கிருந்து விலகினோம். தமிழகத்தின் அடுத்த 50 ஆண்டு காலத் தேவை அவர்தான்,’ என்றார். அதேபோல், இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தவெக பெரும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.