கட்சி நிகழ்வு அசம்பாவித உயிரிழப்புக்கு இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? - ஐகோர்ட்

தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு
கட்சி நிகழ்வு அசம்பாவித உயிரிழப்புக்கு இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? - ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசும், அதிமுகவும் இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.கே.நகர் பகுதியில் 2023 டிச.9-ம் தேதி அதிமுக சார்பில் மண்டல செயலாளர் நித்யானந்தம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ என்ற 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதையடுத்து தனது மகளின் மரணத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி யுவஸ்ரீயின் தந்தை பி.வடிவேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், நிவாரணம் வாங்க அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும் போலீஸாரும், அரசு நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

நிவாரண உதவி வழங்க முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் எனது மகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்க கமாட்டார். கூலித்தொழிலாளியான எனக்கும், எனது குடும்பத்துக்கும் எங்களது மகளின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதால் ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஷபீக், அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசும், அதிமுகவும் இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

கட்சி நிகழ்வு அசம்பாவித உயிரிழப்புக்கு இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? - ஐகோர்ட்
மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in