

தஞ்சாவூா்: கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அதுதொடர்பான சுற்றறிக்கையையும் திரும்ப பெற வலியுறத்தி உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா, நவ.12-ம் தேதி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் 31.8.2026 அன்றுள்ளபடி 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களால் விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்பில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
காலிப் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதால், காலதாமதம் ஏற்படும்.
எனவே, அதுவரையிலான இடைப்பட்ட காலத்தில், ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணிகள் தடையின்றி நடைபெறும் வகையில், ரேஷன் கடை விநியோகம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு காலிப் பணியிட ரேஷன் கடைகளைத் தற்காலிகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் விற்பனையாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கடை அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இல்லாதவராகவும், அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கெனவே பணியில் இல்லாதவராகவும், சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர்கள், பணியாளர்களின் நெருங்கிய உறவினர் அல்லாத வராகவும் இருக்க வேண்டும்.
விற்பனையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 வீதம் மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500, கட்டுநர்களுக்கு மாதம் ரூ.6,600 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு ரேஷன் கடை பணியாளர்கள், படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா கூறியது: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வழியாக மட்டுமே நிரப்ப வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு மூலமாக நிரப்பினால், தவறான முன்னுதாரணம் ஏற்படும். இந்த பணி முற்றிலும் தற்காலிக பணி என்பதாலும், குறைவான ஊதியம் நிர்ணயித்துள்ளதாலும், சுய உதவிக்குழு மூலமாக தேர்வு செய்யப்படுபவர்கள், பொறுப்பு இல்லாமல் கடமைக்கு பணியாற்றுவார்கள். இதனால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கும் சூழலில், அவர்களை கூட்டுறவு துறையின் மாவட்டஆள் சேர்ப்பு நிலையம் வழியாக ஓரிரு மாதங்களில் தேர்வு செய்யலாம். எனவே, ரேஷன் கடை காலிப் பணியிடங்களுக்கு சுய உதவிக்குழு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.