

எட்டயபுரம் அருகே கோட்டூர் விலக்கு பகுதியில் லாரி மீது மோதிய விபத்தில் உருக்குலைந்த கார்.
கோவில்பட்டி / ராமேசுவரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (45). இவர், தனது மனைவி வனிதா (37), மகள் சந்தியா (15), மகன் பிரதீப் குமார் (13), உறவினர் வசந்தி (40) ஆகியோருடன், திருச்செந்தூர் கோயிலுக்கு காரில் கடந்த 11-ம் தேதி புறப்பட்டு வந்தார்.
காரை அதே பகுதியைச்சேர்ந்த பழனி (45) ஓட்டினார். இந்நிலையில் நேற்று காலை இவர்கள் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்தை அடுத்துள்ள கோட்டூர் விலக்கு பகுதியில் சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் பலமாக மோதியது.
இதில், பாஸ்கரன், வனிதா, வசந்தி, ஓட்டுநர் பழனி ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உருக்குலைந்த காருக்குள் சிக்கியிருந்த 4 பேரின் உடல்களையும் எட்டயபுரம் போலீஸார் மீட்டனர்.
படுகாயமடைந்த சந்தியா, பிரதீப் குமாரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எட்டயபுரம் போலீஸார் வழக்குபதிந்து, லாரி ஓட்டுநர் தென்காசி சுப்பிரமணியனிடம் விசாரித்தனர். மற்றொரு விபத்து இதேபோல் ராமேசுவரம் அருகே வேதாளை வேலவன் குடியிருப்பைச் சேர்ந்த கவுசல்யா.
தனது 4 வயது மகள் நவ்யாக்கு உடல்நிலை சரியில்லாததால் மண்டபத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பினார். ஸ்கூட்டரை இவரது சகோதரர் கபில் (19) ஓட்டினார்.
வழியில் எதிரே வந்த பைக், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கபில், பைக்கை ஓட்டி வந்த குஞ்சார்வலசையை சேர்ந்த ரித்திஸ் (20) ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை நவ்யாயும் பின்னர் உயிரிழந்தது. கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்டபம் போலீஸார் விசாரிக்கின்றனர்.