

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது. அடுத்தகட்ட விசாரணை எப்போது நடந்தாலும் ஆஜராக வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 2021-26-ல் நடைபெற்ற திமுக ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசகுமார் உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
வழக்கு தொடர்பாக இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 16-ம் தேதி சோதனை நடத்தினர். இன்று (செப்.18) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் வழங்கப்பட்டது.
அதன்பேரில், அன்பில் மகேஸ் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்துக்குப் பின்னர் விசாரணை முடிவுற்றது. அடுத்து எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவரிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.