

புது டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு இன்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், அவர்கள் மீண்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிருப்தி திரிணமூல் காங்கிரஸாருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
என்சிபிஐ என்ற கட்சியின் பெயரில் செயல்படும் 20 அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தனி மேஜை மற்றும் இருக்கைகளை ஒதுக்கியதைத் தொடர்ந்தே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த அதிருப்தி எம்.பி.க்களைத் தனி நாடாளுமன்றக் கட்சியாக இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அமர விரும்பவில்லை என்று அந்த அதிருப்தி எம்.பி.க்கள் கோரியதாலேயே அவர்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “அங்கீகரிக்கப்படாத என்சிபிஐ-யின் வருகையை எதிர்த்து, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி கட்சி, நேஷனல் கான்பரன்ஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தது.
இந்த 20 அதிருப்தி எம்.பி.க்களின் இணைப்புக்குச் சபாநாயகர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் 20-ம் இன்னும் நிலுவையில் உள்ளன. அப்படியிருக்க, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த 20 அதிருப்தி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் எப்படி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்?” என்றார்.
நாடாளுமன்ற வளாகக் கட்டிடத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவால் கூட்டப்பட்ட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரில் அரசு கொண்டுவரவுள்ள சட்டங்கள் மற்றும் வரவிருக்கும் கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறக்கூடிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.