

சென்னை: தொகுதி மறுவரையறையை எதிர்த்து பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து, தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் நேற்று கொண்டு வந்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறைத் தடையை நீக்கவும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யவும், மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோல்வி அடைந்தது.
இந்நிலையில், மீண்டும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது. அதன்படி, 1971-க்குப் பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும் மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்.
எனவே, மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 3-ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் குறித்து முதல்வர் விஜய் பேசியதாவது: பெண்களுக்கு அரசியலில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இது சலுகை அல்ல, அவர்களின் ஜனநாயக உரிமை. எனவே, மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அதை ஒத்திவைக்கக் கூடாது.
தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கீடு செய்து, 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
பின்னர் தீர்மானம் குறித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள் பேசினர். அதன் விவரம்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: தொகுதி மறுவரையறையின் பாதிப்பை முதலில், இந்தியாவுக்கே கூறியவர் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகம் பாதிக்கக் கூடாது என்று திமுக ஆட்சியிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார் ஸ்டாலின். ஏப்ரல் 16-ல் மசோதா நகலை எரித்து, எங்கள் எதிர்ப்பைக் காட்டினோம். மக்களவையில் மசோதா தோற்கடிக்கப்படக் காரணம் திமுகதான்.
33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக முழுமையாக வரவேற்கிறது. கடந்த 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அதேவேளையில் மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18 என்ற சதவீதத்தைக் குறைக்க அனுமதிக்கக் கூடாது. ஆகவே தொகுதி மறுவரையறையை எதிர்த்து அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்த்ததற்கு நன்றி. அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்தித்து தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை மசோதா எப்போது வந்தாலும், தமிழக எம்.பி.க்கள் 39 பேரும் வெளிநடப்பு செய்யாமல் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசுகையில், தொகுதி மறுவரையறை மசோதாவை இதுவரை மத்திய அரசு கொண்டு வரவில்லை. கொண்டு வந்த பிறகே விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எம்.போஜராஜன் (பாஜக): தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலனையில்தான் உள்ளது. அதற்குள் அவசரமாக இத்தீர்மானம் கொண்டு வருவது ஏன் என்று புரியவில்லை. எதிர்கால தேவை கருதியே அதிக இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இது அடுத்த தேர்தலுக்காக அல்ல. அடுத்த தலைமுறைக்காக அமைக்கப்பட்டது. இத்தீர்மானத்தை எதிர்க்கிறேன். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அவசியம்.
பாமக எம்எல்ஏ அ.கணேஷ்குமார்: தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. செவி வழி செய்தி அடிப்படையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு எம்எல்ஏக்கள் கருத்துகளைத் தெரிவித்த பின்னர் குரல் வாக்குகெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தி.க. தலைவர் கி.வீரமணி, தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் எதிர்த்துள்ளனர்.