

செங்கோட்டையன்
ஈரோடு: ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை உடனே வழங்குவதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆணையராகக் கொண்டு, தனி வாரியம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை வீட்டுமனைப் பட்டா தொடர்பான கோரிக்கைகள்தான். ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தாமதமின்றி உடனே வழங்கும் நோக்கில், முதல்வர் உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆணையராகக் கொண்டு, தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1000 நில அளவையர் நியமனம்: மேலும், மாநிலம் முழுவதும் நில அளவீட்டு பணிகளை விரைவுபடுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காணவும், வருவாய்த் துறை மூலம் தற்காலிக அடிப்படையில் 1,000 நில அளவையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பூஜ்ய மதிப்பு நிலங்கள், நத்தம் நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கும் விரைந்து தீர்வு காணப்படும்.சிப்காட் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்