

கோவை: “மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள இல்லத்தில் இன்று (ஏப்.29) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் தவறுகள் நடந்திருக்கின்றன என ஓர் அமைப்பு புகார் அளித்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று அந்த வழக்கை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அது குறித்து சில விளக்கங்களை அளிப்பது என்னுடைய கடமை.
மின்சார வாரியத்தை பொறுத்தவரை மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987-ம் ஆண்டு தொடங்கி அன்று எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள்தான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு டெண்டர் கோட் (code) செய்யும்போது 20, 30 பேர் அதில் கலந்து கொள்வார்கள். அதில், எல்1, எல்2, எல்3 கோட் செய்வார்கள். அதில், சிலவை ஒரே தொகையாக இருக்கும்.
பொதுவாக மின்சார வாரியத்தில் எல்1 தொகையை யார் மேட்ச் செய்து கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த டெண்டரை பிரித்துக் கொடுப்பார்கள். இதுதான் மின்சார வாரியத்தில் நடைமுறை. அதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதுதவிர, ஸ்கூட்டனிங் கமிட்டி, போர்டு கமிட்டி உள்ளிட்ட மூன்று கமிட்டிகள் சேர்ந்துதான் இறுதி முடிவு எடுப்பார்கள். குறிப்பிட்ட அந்த ஓர் அமைப்பு ஏதோ இந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் தவறுகள் நடந்ததை போன்று பிரித்தெடுத்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.
அந்தப் பொறுப்பை பார்த்ததனால் எந்த ஓர் இடத்திலும் அரசு நிர்வாகத்துக்கு தவறு நடக்கவில்லை. அரசுக்கு ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என உறுதியாக கூறுகிறேன். இன்னும் நீதிமன்றத்தில் இருந்து முழு உத்தரவு வரவில்லை. முழு உத்தரவு வந்த பிறகுதான் அதற்குள் என்னென்ன உள்ளது என்பது பற்றி தெரியும்.
இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுவது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த அமைப்பு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்பட்டுள்ளது . நீதிமன்றத்தில் இது குறித்து உரிய விளக்கங்களை நாங்கள் அளிப்போம்.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள். மின்மாற்றி வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞருடன் பேசி முடிவு எடுக்கப்படும்.
வாக்குப் பதிவு தினத்தன்று 3 மணிக்கு கோவையிலிருந்து கரூருக்கு புறப்பட்டு வாக்களிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், கோவையில் கடைசி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் நிலவியதால் நான் வாக்களிக்க செல்ல முடியவில்லை. உறுதியாக தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ‘‘கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அச்சூழலில் கூட்டத்தை நடத்தியவர்கள் ஓடிவிட்டார்கள். நாங்கள்தான் மருத்துவமனைக்கு சென்றோம். பிற கட்சியினரும் வந்தார்கள். மக்களைப் பற்றி சிந்திக்காத அவர்களைப் பற்றியும், அச்சம்பவத்தில் விட்டு விட்டு ஓடியவர்கள் பற்றியும் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் 45 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். தற்போது அதைவிட கூடுதலாக பெறுவோம். மீதமுள்ள 55 சதவிவீதத்தை யார் பிரித்தால் எங்களுக்கு என்ன? அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்’’ என்றார்.