

காரைக்கால்: வயதான தந்தையை கவனித்துக் கொள்ளாத 3 மகன்களுக்கு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவிட்டார்.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (84). இவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு தனது மகன்கள் வரதராஜன், மீனாட்சிசுந்தரம், திருமுருகன் ஆகிய மூவரும் தன்னை கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டதாகக் கூறி, காரைக்கால் சார்பு நீதிமன்ற பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த அப்போதைய சார்பு நீதிபதி எம்.ஆதர்ஷ், 3 மகன்களும் முதியவர் முனுசாமிக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து 3 மகன்களும் காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றை ஆட்சியர் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது மகன்கள் இதுவரை தனக்கு மாத உதவித்தொகை வழங்கவில்லை என்று சார்பு நீதிமன்றத்தில் முனுசாமி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சார் ஆட்சியரும், சார்பு கோட்ட நீதிபதியுமான எம்.பூஜா, மாத உதவித்தொகை வழங்க தீர்ப்பாயம் அளித்த உத்தரவை மதிக்காத குற்றத்துக்காக முனுசாமியின் 3 மகன்களுக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
மேலும், ஜூன் 9-ம் தேதி காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் 3 மகன்களும் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அன்றைய தினம் முனுசாமிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உதவித்தொகை முழுவதையும் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காதபட்சத்தில் உதவித்தொகை வழங்கும் வரை சிறையில் இருக்க நேரிடும் எனவும் சார்பு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, 3 மகன்களும் காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.