

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், “எனது அரசியலில் நான் வியந்து பார்த்த விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.
பின்னர் தவெகவில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்த அவர், “நான் அரசியலில் மிகவும் வித்தியாசமானவன். தமிழகத்தில் பல போராட்டங்களில் பங்கேற்று சிறையில் இருந்தவன். 18 வயதில் எனது பணியை தொடங்கி, இன்று வரை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறவன்.
நான் ஏன் இப்போது தவெகவுக்கு வந்தேன் என்பது மிகவும் முக்கியமான கேள்வி. சிவப்புத் துண்டுடன் தவெகவில் பயணிக்க விரும்புகிறேன். இதற்கு காரணம், என் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத பிரச்சினை ஊழல் ஒழிப்புதான். இதை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். அதனால்தான் இங்கு இணைந்தேன்.
எனது அரசியலில் நான் வியந்து பார்த்த ஒரு விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்திருக்கிறது. சாதியை ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என கூறினார்கள்; ஆனால் ஒழிக்க முடியவில்லை. இந்தத் தேர்தல் சாதி, மதம், ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை போக்கி, இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை முதல்வர் விஜய் உருவாக்கி இருக்கிறார்.
இந்த தேர்தலில் காசு, பணம் இல்லாதவன் வெற்றி பெற முடியும் என்பது நிரூபித்து காட்டப்பட்டிருக்கிறது. இதை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாக நான் கருதுகிறேன். இது கட்சிகளை கடந்து, நமது வேறுபாடுகளை கடந்து எளிய மக்களுக்கான, அதாவது பெரியார், மகாத்மா, அம்பேத்கர் ஆகியோர் எடுத்த இயக்கமாக இது வளர வேண்டும். அதற்கான விதை தற்போது போடப்பட்டிருக்கிறது.
அனைவரும் ஒருங்கிணைந்து இதை செய்ய வேண்டும் என இங்கு இணைந்துள்ளேன். பொதுவுடமையின் இந்த வேர்கள் மேலும் பலப்படக் கூடிய விதத்தில் நானும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.