

கோவை: “புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிதான் காங்கிரஸ்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எந்த தீய சக்தியை எதிர்த்து போராடுவோம் எனச் சொன்னார்களோ, அந்த தீய சக்தியின் ஒரு பகுதியாக இருந்தவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
புற வாசல் வழியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது காங்கிரஸ். பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சி காங்கிரஸ். ஊழல் அதிகமாக செய்த கட்சி, மாற்றங்களை கொண்டு வருவோம் என சொன்ன தவெக இனி எப்படி இதை செய்யப்போகிறார்கள் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். காங்கிரஸின் அழுத்தத்துக்கு அவர்கள் இடம் கொடுக்கக் கூடாது. அமைச்சரவையில் உள்ளவர்களை விஜய் சரியாக வழிநடத்த வேண்டும்
பிஎம்ஸ்ரீ, புதிய கல்விக் கொள்கை இவையெல்லாம் நல்ல திட்டம். திமுக ஆட்சி அதை வேண்டா வெறுப்பாக அணுகியதால்தான் மக்கள் இம்முறை அவர்களை புறக்கணித்திருக்கிறார்கள்.
வந்தே மாதரம் பாடல் நமது நாட்டு உணர்வை தட்டி எழுப்பிய பாடல். இதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றிதான் ஆக வேண்டும்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு பின்னால் தேச நலன் இருக்கிறது. ராகுல் காந்தியும் தான் சுற்றுப் பயணம் செல்கிறார். பிரதமரின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணமும் இந்தியாவின் நலனுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று அவர் கூறினார்.