ஈரோடு: ‘நாடே வியக்கும் வகையில் தவெக சின்னம் இருக்கும்’ என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் நம்பியூர் எம்ஜிஆர். நகர் பகுதியில் வசிக்கும் மக்களை நேற்று சந்தித்தார்.
விஜய் முதல்வராவது உறுதி: அப்போது அவர் பேசும் போது, “இங்கு இருக்கும் குழந்தைகளைக் கேட்டால்கூட, அவர்கள் விஜய்க்குதான் வாக்களிப்போம் என்கிறார்கள்.
மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய், 2026-ல் தமிழக முதல்வராக அமர்வது உறுதி. தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். தவெகவுக்கு விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது. அந்த சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப் போகிறது” என்றார். நிகழ்வில், முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட தவெகவினர் பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை: தவெக தலைவர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் டிச.16-ம் தேதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்ட பவளத்தான்பாளையம் அருகே உள்ள தனியார் இடத்தை மாவட்ட எஸ்.பி. சுஜாதா ஆய்வு செய்தார்.
பின்னர், அந்த இடம் குறுகியதாக, போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதால், மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி தவெகவினரை அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 16 ஏக்கர் நிலம் மற்றும் அதன் அருகே மற்றோர் இடம் என 2 இடங்களை பார்வையிட்டதுடன் அதுகுறித்து தவெக நிர்வாகிகளிடம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.