

(உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜ ராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்
போடி: போடியில் முறையான ஆவணங்களின்றி பல டன் ஏலக்காய் விற்று கோடிக்கணக்கில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த திமுக நி்ர்வாகி சங்கர் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். தேனி மாவட்டம் போடி நகராட்சித் தலைவராக (திமுக) இருப்பவர் ராஜ ராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர்.
திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் போடி 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் தமிழக, கேரள பகுதிகளில் ஏலக்காய்களை கொள்முதல் செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார்.
கடந்த மாதம் சுமார் 300 டன் ஏலக்காய்களை முறையான ஆவணங்கள் இன்றி போடியில் இருந்து ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் சேத்துக்குழி எனும் இடத்தில் மற்றொரு சோதனையில் சுமார் ரூ1,200 கோடி வரை மோசடி நடந்திருந்தது தெரிய வந்தது. இதில் சங்கருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டுப் புலனாய்வுக்கு முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி வருமானவரி, வணிகவரித் துறையினர் மற்றும் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமலாக்கத்துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக போடி-முந்தல் சாலையில் உள்ள ஏலக்காய் கிடங்கு, அங்குள்ள அலுவலகத்துக்கு வந்தனர்.
சம்மன் அனுப்பியும் சங்கர் வராததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை சோதனை நடந்தது. ஆனால் சங்கர், அவரது மனைவிராஜ ராஜேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோர் தலைமறைவாகினர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாரிகள் முன்பு ராஜ ராஜேஸ்வரி ஆஜரானார்.
சந்தைப்பேட்டை, தபால் அலுவலகச் சாலையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணையைத் தொடர்ந்தனர். சம்மன் அனுப்பியும் சங்கர், அவரது மகன் லோகேஷ் ஆஜராகவில்லை. இந்நிலை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து சங்கர் நேற்று மதியம் அவரது வீட்டில் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் வரி ஏய்ப்பு மற்றும் ஆவணங்கள் இல்லாமல் அதிகளவில் ஏலக்காய்களை வடமாநிலங்களுக்கு அனுப்பியது தொடர்பாக விசாரணை யைத் தொடங்கினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை சார்பில் கூறுகையில், `வரி ஏய்ப்பு மட்டுமல்லாது, இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்தை முக்கிய நபர்க
ளுக்கு கிரையம் முடித்ததிலும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளது. இதனால் பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் முடிவில்தான் முழு விவரம் தெரிய வரும்' என்றனர். விசாரணையில் எஸ்.பி அளவிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் விரைவில் சங்கர் கைது செய்யவும் வாய்ப்புள்ளது என்று விசாரணை அலுவலர்கள் தெரிவித்தனர்.