

தாராபுரம்: திமுக, அதிமுக மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமி்ழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘‘இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்யக் காரணமே, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிதான்.அவரால்தான் 25 பேர் நமக்கு வாக்களித்தார்கள். அவரது நடவடிக்கை சரியில்லை என்பதால் தான், சத்யபாமா நம்மோடு இணைந்துள்ளார்.
இந்த கட்சி பணம் வாங்கும் கட்சியா? திமுக மற்றும் அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளனர். திமுக உடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற பழனிசாமி நினைத்ததால்தான் 6 பேர் தங்கள்பதவியை ராஜினாமா செய்தனர். நாம் மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்பதால்தான், வேட்பாளருக்கு எதிர்ப்பு என பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாரும் பெற முடியாத வெற்றியைப் பதிவு செய்வோம். யாரும் நமக்கு போட்டியில்லை. மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் நமது நிலை வேறு’’ என்றார்.
திடீர் மின்தடை: முன்னதாக, இக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த தவெகவினர், மின்துறை அலுவலர்களை தங்களது செல்போன்களில் தொடர்புகொள்ள முயன்ற போது, யாரும் அழைப்பை எடுக்காததால் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.
அருண்ராஜ் குற்றச்சாட்டு: இதற்கிடையே, தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அமைச்சர் அருண்ராஜ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக வேட்பாளரை தவறாகச் சித்தரித்து, ஊருக்குள் வரவிட வேண்டாம் என சிலருக்கு பணம் கொடுத்து திமுகவினர் தூண்டிவிடு கின்றனர். ரூ.50 கோடி பெற்று பதவியை ராஜினாமா செய்ததாகப் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக பேராசையோடு திமுக தலைமையோடு கூட்டணி அமைக்க அதிமுக தலைமை முயன்றது. இது மக்கள் தீர்ப்புக்கு எதிரான சதி என்பதால்தான் 6 அதிமுக எம்எல்ஏக்களும் பதவி விலகினார்கள். அதிமுக என்ற கட்சியின் கொள்கையை நீர்த்துப் போகச் செய்தவர் அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி. எடப்பாடி தொகுதியில் ரூ.25 கோடி கொடுத்து தவெக வேட்பாளரை வாங்கியுள்ளார். நமது வேட்பாளர் அங்கு நின்றிருந்தால் எடப்பாடியில் பழனிசாமி டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெகவை நோக்கி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.