மாற்றுக்கட்சி வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைப்பதுதான் தூய ஆட்சியா? - பழனிசாமி கேள்வி

மாற்றுக்கட்சி வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைப்பதுதான் தூய ஆட்சியா? - பழனிசாமி கேள்வி
Updated on: 
2 min read

மதுராந்தகம்: ‘மாற்று கட்சியின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதுதான் தூய்மையான ஆட்சியா?’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்துள் ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதாசம்பத்துக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, நேற்று மாமண்டூர், மதுராந்தகம், சரவம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த இடைத்தேர்தல் இயற்கையானது அல்ல. தவெக அரசை காப்பாற்றுவதற்காக முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் திணிக்கப்பட்டு நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் துரோகம் இழைத்துள்ளார். துரோக எண்ணம் கொண்டவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது. அதிமுக இயக்கத்துக்கு துரோகம் செய்து, தவெக வேட்பாளராக வரும் அவருக்கு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 12 நாட்களில் ராஜினாமா செய்து கட்சிக்குத் துரோகம் செய்தது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை. இதுதான் தூய்மையான ஆட்சியா?

தவெக பெரும்பான்மை இடத்தில் வெற்றிபெறவில்லை, 107 இடம் தான் உள்ளது. அவர்களுக்கு கூடுதல் எம்எல்ஏக்கள் தேவை. அதற்காக திட்டமிட்டு குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்திச்செல்வதை போல கடத்திச்சென்றுள்ளனர். என்ன மிட்டாய் என்பது உங்களுக்குத் தெரியும்.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆளுங்கட்சியான தவெகவும், எதிர்க்கட்சியான திமுகவும் மாறிமாறி குறை கூறி பேசுகின்றனர். நாங்கள் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல், காவல்துறை குறித்து முதல்வர் வாய்திறப்பதில்லை. அதைப்பற்றி பேச முற்பட்டால் முதல்வர் உடனடியாக வெளியே சென்றுவிடுகிறார்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 4 மாதங்களில் என்ன செய்துள்ளார். சினிமாவில் நடப்பது போன்று செய்து விடலாம் என கருதுகிறார். சென்னை பெரம்பூர் தொகுதியில் நாள்தோறும் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 7.5 இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி உயர்கல்வி பயில வழிவகுக்கப்பட்டது. மேலும், குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன. ஆனால், இந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாகக் கூறி வாக்கு பெற்ற தவெக அரசு, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், அதிமுக அரசு ஒரே ஆண்டில் 2 முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. நான் விவசாயி, அதனால் விவசாயிகளின் கஷ்டம் எனக்குத் தெரிகிறது.

அதிமுக நீர்த்துபோன கட்சி என தவெக தலைவர் கூறுகிறார். தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது. மூன்று இலைதான் விட்டுள்ளது.ஆனால் அதிமுகபொன் விழா கண்ட கட்சி. தவெகவின் ஜனநாயக விரோத செயலுக்கு பாடம் புகட்ட அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுக்கட்சி வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைப்பதுதான் தூய ஆட்சியா? - பழனிசாமி கேள்வி
‘ஜெம் வீரமணி வழக்கு சரியான பாதையில் செல்கிறது’ - இந்திய சமூக நல அமைப்பின் செயலாளர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in