“தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும்” - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

Updated on
3 min read

சென்னை: பிரதமர் மோடி அரசின் வகுப்புவாத, ஆர்எஸ்எஸ், பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐந்து மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களுக்கிடையே மோடி அரசு, அவசர அவசரமாக வருகின்ற ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு முடிகிற ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு பிறகு கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று எதிர்கட்சிகள் கூறியதை பாஜக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறைவதற்கான அபாயம் இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தென் மாநிலங்களின் எதிர்ப்பை உதாசினம் செய்து தொகுதி மறுசீரமைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. அதனால் மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 8 மக்களவை தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

அதாவது, தமிழ்நாட்டில் இனி 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள், 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார். இந்த பேராபத்து குறித்தும், மகளிர் இடஒதுக்கீட்டில் பா.ஜ.க.வின் பதுங்கு திட்டம் குறித்து, அன்னை சோனியா காந்தி நேற்று ஆங்கில நாளேட்டில் கட்டுரை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28 மே, 2023 இல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டபட்டபோதே, 848 மக்களவை உறுப்பினர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களுக்கு எதிரானதாகும். தற்போதுள்ள மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் தென் மாநிலங்களிலுள்ள 130 இடங்கள் 103 இடங்களாக குறைந்து விடும்.

இதன்மூலம் மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவிகிதத்திலிருந்து 18.97 சதவிகிதமாக குறைந்துவிடும். தமிழ்நாட்டைப் போல, ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில், இப்போதுள்ள 42 இடங்கள் 34 இடங்களாக குறைந்துவிடும். ஆனால், அதற்கு மாறாக உத்தரபிரதேச மாநிலம் தற்போதுள்ள 80 மக்களவை இடங்களிலிருந்து 91 இடங்களாக உயர்ந்து விடும். அதேபோல, பீகார் 40 இல் இருந்து 50 ஆகவும், மத்தியபிரதேசம் 29 இல் இருந்து 33 ஆகவும், ராஜஸ்தான் 26 இல் இருந்து 31 என உயரக்கூடிய நிலை ஏற்படும். இந்தி பேசுகிற மாநிலங்களில் 63 இடங்கள் உயர்ந்து 143 இடங்களாக அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

மொத்தமுள்ள 26 மாநிலங்களில், 10 இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது பெற்ற 80 சதவிகித வெற்றியை பெற்றால் தற்போதுள்ள 848 இடங்களில் 455 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்படும். ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளபடி தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால், இந்தி பேசும் மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களவை தொகுதிகளையும், இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக, தென்னக மாநிலங்கள் மக்களவையில் பிரதிநிதித்துவம் கடுமையாக குறையக் கூடிய மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது அறுதிப்பெரும்பான்மையில்லாத நிலையிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை ஒன்றன் பின் ஒன்றாக பறித்து வருகிறது. இன்றைய மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளுக்கு ஓரளவு எண்ணிக்கை இருப்பதால் பா.ஜ.க. அரசின் பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்கட்சிகளால் எதிர்த்து குரல் கொடுக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது.

ஆனால், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒரே தேர்தல், ஒரே வாக்கு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நாடு - ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் படையெடுப்புகளால் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேலும் பாதிக்கப்பட்டு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள்.

ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் தற்போது வஞ்சிக்கப்படுவதை விட பலமடங்கு நிதி குறைக்கப்பட்டு கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும். தென் மாநில மக்களின் குரல்வளை ஒடுக்கப்படும். கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பன்முகத்தன்மையோடு வாழ்ந்து வருகிற நல்லிணக்கம் சீர்குலைக்கப்படும்.

எனவே, பிரதமர் மோடி அரசின் வகுப்புவாத, ஆர்எஸ்எஸ்., பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். அந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் 10 நாட்களில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் பாஜகவுக்கும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கும் எதிராக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்ய முடியும்.

இதுவொரு தமிழ் மக்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சினையாகும். இதனுடைய தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை</p></div>
“ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்திருந்தால் ஜி.கே.வாசனை அடித்திருப்பார்” - ராமகிருஷ்ணன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in