

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 4 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடைபெறும் சூழலில், இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது.
தற்போது தமிழகத்தை சேர்ந்த 116 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைபட்டுள்ளனர். 259 மீன்பிடிப் படகுகள் இலங்கையில் உள்ளன. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும், கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது. மத்திய பாஜக அரசின் வெளியுறவுத் துறை தமிழக மீனவர் பிரச்சனையில் அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.