செல்வப்பெருந்தகை
“கட்சிகளுடன் திரைமறைவில் பேரம் பேசும் பாஜக” - செல்வப்பெருந்தகை சந்தேகம்
தவெக போன்ற கட்சிகளுடன் பாஜக திரைமறைவு பேரங்களை நடத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் கட்டத்தில் உள்ளது.
2004-ல் உருவான இக்கூட்டணி, கொள்கை ரீதியிலான பிணைப்புடன் 2006, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், பல மக்களவைத் தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சி, மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 வாக்குறுதிகளில் 450-க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றியுள்ளது. மத்திய பாஜக அரசின் முட்டுக்கட்டைகளையும் மீறி, காலை உணவுத் திட்டம் போன்ற அறிவிக்கப்படாத பல மக்கள் நலத் திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதனால் தமிழக மக்களின் தனிநபர் வருமானம் ரூ.3.62 லட்சமாக உயர்ந்துள்ளது, இது தேசிய சராசரியை விட மிக அதிகம்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக ரூ.35 லட்சம் கோடி உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் தமிழகம் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது. நாட்டின் உற்பத்தி மதிப்பில் 9.37 சதவீதம் பங்களிப்பைத் தந்தாலும், மத்திய அரசு வரிப் பகிர்வில் வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கி தமிழகத்தை வஞ்சிக்கிறது.
தமிழகம் வழங்கிய ரூ.1.80 லட்சம் கோடி வரிப்பணத்தில், திரும்பப் பெற்றது வெறும் ரூ.45,052 கோடி மட்டுமே. திமுக கூட்டணி 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் வெளிப்படையான தன்மையோடு கட்டுக்கோப்பாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் இன்னும் தெளிவான சூழல் இல்லை. தவெக போன்ற கட்சிகளுடன் திரைமறைவு பேரங்கள் நடப்பதாகத் தெரிகிறது. பாஜக-வின் 'அவுட் ஆஃப் கன்ட்ரோல்' ஆகத் தமிழகம் இருப்பதை முதல்வர் கம்பீரமாக நிரூபித்து வருகிறார்.
தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைவதைத் தடுக்க, காங்கிரஸ் பேரியக்கம் 234 தொகுதிகளிலும் களப்பணியாற்றும். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். வரும் 36 நாட்களும் அயராது உழைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
