“அதிக வெற்றியை பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி” - ஸ்டாலின் ஆஃபர்

சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள்.

Updated on
2 min read

தேர்தலில் அதிக வெற்றியை பெற்றுத் தருபவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: தேர்தல் பணியில் எப்போதும் திமுக தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. அரசியல் களத்திலும் நமது கையே ஓங்கியுள்ளது. பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கியது, மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அளித்தது, முதியோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு கூடியுள்ளது.

அதேபோல், கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து பலமான கூட்டணியை கட்டியிருக்கிறோம். கூட்டணி வலிமை, நலத்திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவற்றால் நாம் தான் வெல்வோம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம். இனி எந்த வகையிலும் சிறுசறுக்கல்கூட வந்துவிடக்கூடாது. உங்களின் ஒவ்வொரு செயலும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

வெற்றியை நெருங்கியுள்ளோம். இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். நீங்கள் போடும் உழைப்புக்கான பலன் உங்களை வந்துசேரும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சினையும் இருக்கக்கூடாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கினால், அவர்கள் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனே நடவடிக்கை பாயும். தனிப்பட்ட நிர்வாகிகளைவிட கட்சியின் நலன்தான் முக்கியம்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கிறது. இதில் நம் தொகுதியில் நடப்பது தலைவருக்கு தெரிய வாயப்பில்லை என்ற நினைப்பில் இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு 234 தொகுதிகளிலும் கண்ணும், காதும் இருக்கிறது. அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில வந்துவிடும். உங்கள் பொறுப்பில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்தமுறை அமையவுள்ள நமது ஆட்சியில் சீனியாரிட்டி இரண்டாம்பட்சம். அமைச்சர் பதவி என்பது அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் மண்டல பொறுப்பாளர், மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவே கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கல்ல. வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அவரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், இவரைப் பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம். மக்களுக்கு பிடித்தவர்களுக்கும், வெற்றிவாய்ப்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே இந்த முறை சீட் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர். கட்சியின் மாபெரும் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கான பரிசு தேர்தலுக்குப் பிறகு தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கை எப்போது? - திமுக-வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை வடிவமைத்து முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் ஓரிரு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் விதமான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள்.</p></div>
6 தொகுதிகளுக்கு குறையக் கூடாது: இந்திய கம்யூ. செயற்குழு திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in