

செல்வப்பெருந்தகை
சென்னை: “மோடியின் தலைமையில் அணிவகுப்போம் என்று அமித் ஷா பேசுகிறார். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா? இதுவரை அதிமுகவை தவிர குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த கட்சியும் பாஜக இருக்கிற கூட்டணியில் சேர முன்வரவில்லை” என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பாஜக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ய வைத்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது.
நேற்று பாஜக கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் பங்கேற்கவில்லை.
பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் கூட்டத்தில் பேசும்போது, அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறாரே தவிர, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.
அதோடு, மோடியின் தலைமையில் அணிவகுப்போம் என்று அமித் ஷா பேசுகிறார். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா? இதுவரை அதிமுகவை தவிர குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தக் கட்சியும் பாஜக இருக்கிற கூட்டணியில் சேர முன்வரவில்லை. அதிமுக, பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை எங்கே தொடங்கி, எங்கே முடிவடைகிறது என்பதிலே தெளிவில்லை, குழப்பம் நீடிக்கிறது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் தெளிவோடு தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறோம்.
அமித் ஷா ஊழலைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அரசு திட்டங்களில் சலுகை வழங்கி நன்கொடையை குவித்த கட்சி பாஜக. இதையறிந்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்தது. ஆனால், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக மொத்தம் வழங்கப்பட்ட நன்கொடையில் 83.6 சதவிகித தொகையை பாஜக மட்டுமே பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.6088 கோடி நன்கொடையாக கார்ப்பரேட்டுகள் மூலம் பாஜக பெற்றிருக்கிறது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடையை வாரி வழங்குவது ஏன்? ஒன்றிய அரசினால் பலனடைந்தவர்களிடம் இத்தகைய நிதியை பெறுவதை விட அப்பட்டமான ஊழல் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒன்றியத்தில் ஆளுங்கட்சியான பாஜக, லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக, தேர்தல் அறக்கட்டளை மூலம் நன்கொடைகளை குவிக்கிற நிலையில் ஊழலைப் பற்றி பேச அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று அமித் ஷா ஆணவத்தின் உச்சிக்கே சென்று கொக்கரிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வரும் தமிழ்நாடு அரசை அழிக்க வேண்டுமென்று கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் டிசம்பர் 2025 நிலவரப்படி ரூ.200 லட்சம் கோடி இருக்கிறது. 1947 முதல் 2004 வரை 67 ஆண்டுகளில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசுகள் பெற்ற மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி.
ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் பாஜக பெற்ற கடன் ரூ.145 லட்சம் கோடி. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82.6 சதவிகிதம் கடனை குவித்து ஒவ்வொரு இந்திய குடிமக்கள் மீதும் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கடன் வைத்திருக்கிறது. அதேபோல, உலக வறுமைக் குறியீட்டில் 123 நாடுகளில் 102-வது இடம், மனித வளர்ச்சிக் குறியீட்டில் 134-வது இடம், பத்திரிக்கை சுதந்திரத்தில் 162-வது இடம், பாலின சமத்துவத்தில் 131-வது இடம் என அனைத்து குறியீடுகளிலும் உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா இருக்கிறது.
இதுதான் பாஜக அரசின் லட்சணம். ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 16 சதவிகிதமாக உயர்ந்து, தனிநபர் வருமானம் ரூபாய் 3.58 லட்சமாக உயர்ந்து, தேசிய தனிநபர் வருமானமான ரூபாய் 1.96 லட்சத்தை விட 1.6 மடங்கு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பல உத்திகளை பாஜக அரசு கையாண்டு வருகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவிகிதம் உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த மதிப்பில் 9.37 சதவிகிதம் பங்களிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் 4 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. 2023-24-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் வரித் தொகுப்பில், தமிழ்நாட்டின் பங்களிப்பு ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி.
ஆனால், ஒன்றிய அரசு வரித் தொகுப்பிலிருந்து தமிழ்நாடு பெற்றதோ ரூபாய் 45,052 கோடி. அதைப்போலவே, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடியை ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், மாணவர்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பாதிப்பிலிருந்து தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது.
எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, நிதி வழங்குவதில் வஞ்சிக்கிற போக்கு, இந்தி மொழித் திணிப்பு, செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருத மொழிக்கு நிதியை வாரி வழங்குவது, ரயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு, 100 நாள் வேலை திட்டத்தை முடக்கி மாநில அரசுகள் மீது நிதிச் சுமையை கூட்டுவது போன்ற தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பாஜகவையும், அதோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஒருமுறையல்ல, இருமுறையல்ல. தமிழ்நாடுக்கு அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் அவரது ஒவ்வொரு சுற்றுப் பயணமும் இண்டியா கூட்டணிக்கு வலு சேர்ப்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் பெருகும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.