“என்டிஏ எனும் மூழ்கும் கப்பலில் தினகரன்...” - செல்வப்பெருந்தகை கருத்து

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

Updated on
1 min read

சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் நேற்று வரை எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தவர். கூட்டணியில் சேர்ந்தும் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதையே அவர் தவிர்க்கிறார்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக மக்கள் அதிமுக - பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் நேற்று வரை எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இப்போது எப்படி எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து டிடிவி தினகரன் அரசியல் செய்யப் போகிறார், மேடை ஏறப் போகிறார் வாக்கு கேட்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிடிவி தினகரன் இன்று கூட்டணியில் சேர்ந்தும் இபிஎஸ் பெயரை சொல்வதையே தவிர்க்கிறார். ஆகவே, இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒரு முறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவோம் என பாஜக கூறி வருகிறது. தமிழக மக்களை மண்டியிட வைப்போம் என சொல்லும் பாஜக, எப்படி அதிமுகவுடன் சேர்ந்து தமிழகத்தில் வாக்கு கேட்பார்கள்?

பிரதமர் மோடி ஒடிசாவுக்கு சென்றால் தமிழகத்தில்தான் ஒடிசாவின் கஜானா சாவி இருக்கிறது என்று பேசுகிறார். பிஹாருக்கு சென்றால் பிஹாரிகளை தமிழக மக்கள் வஞ்சிக்கிறார்கள் என்று கூறுவார். இப்படி எல்லாம் பேசிவிட்டு தமிழக மக்கள் யாரும் விவரம் இல்லாதவர்கள், மறந்து விடுவார்கள், பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று பேராசையோடு படையெடுக்கிறார்கள். இந்த படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ அவர்களும் சேர்ந்துதான் மூழ்கிபோவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை</p></div>
“என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” - இபிஎஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in