சென்னை: தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்களில் பிரதமர் மோடி காட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழை உயர்த்திப் பேசியது நமக்கும் பெருமை. ஆனால், சொல்லில் பாராட்டியும் செயல்களில் புறக்கணிக்கும் நிலைமை குறித்து மக்கள் உண்மை அறிய வேண்டியது அவசியம்.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு சம்ஸ்கிருதமொழிக்காக மட்டும் ரூ.2532.59 கோடி செலவிட்டிருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற 5 பாரம்பரிய மொழிகளுக்கான மொத்தச் செலவு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே.
தமிழுக்கான உண்மையான மரியாதை நிதியிலும், பாதுகாப்பிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் காட்டப்பட வேண்டும். பாரம்பரிய மொழிகள்அனைத்துக்கும் சமமான மரியாதையும் நிதியும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.