

சென்னை: “எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பதற்கான வெள்ளை அறிக்கையை வருமான வரித் துறையினர் வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜனநாயகக் கடமையை ஆற்றிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி. மத்தியில் பாஜக அரசு கொண்டு வர முயன்றது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அல்ல. அது ஓர் ஏமாற்றும் மசோதா. உண்மையான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பஞ்சாயத்து ராஜ் மூலம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த்.
கடந்த வாரம் ராகுல் காந்தி பிரச்சாரத்துக்கு வந்தபோது, வெளிமாநில அதிகாரிகள் சிலர் எங்கள் இடங்களில் முற்றுகையிட்டனர். குறிப்பாக, எனது தேர்தல் பொறுப்பாளர் மனோகரன் என்பவரது இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
நான் தேர்தல் பரப்புரைக்கு வெளியில் சென்ற நேரத்தில் அலுவலகம் சென்ற அதிகாரிகள் எங்கள் அலுவலக சிசிடிவி-யை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். எதற்காக சிசிடிவி-யை ஆஃப் செய்ய சொன்னீர்கள்? ஒரு ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மையுடன் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்.
மேலும், சோதனையில் பணம் கிடைக்கவில்லை என்றதும், பின்னர் சிசிடிவியை ஆன் செய்து பதிவுகளைக் கேட்டு ஆய்வு செய்துவிட்டு, அதிலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் சோதனைக்கு வந்த அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். அப்போது நடந்தவை காட்சிகளாக சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆனால், எனக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் எங்கும் சோதனை நடத்தவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நான் பிரச்சாரத்தில் இருந்த சமயம் எனது ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் ஏப்ரல் 19, 20 தேதிகளில் நடைபெற்ற சோதனையில் எனது அலுவலகத்தில் இருந்த என்ன பொருட்களை எடுத்து சென்றார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
மேலும், எனது ஆதரவாளர்கள் இடங்களிலும் பல கட்ட சோதனை நடைபெற்றது. இருப்பினும் சோதனையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் இது போல் ஒரு நடவடிக்கை என்பது வன்கொடுமை. இது குறித்து கேள்வி எழுப்பினால், எங்கள் மீதே வருமான வரித் துறையினர் புகார் கொடுத்துள்ளனர்” என்றார்.
வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதாக கூறி சிசிடிவி வீடியோ ஒன்றை வெளிட்டு தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “இந்த ஆதாரத்தை நேற்றைய தினமே வெளியிட்டால், தேர்தல் ஸ்டன்ட் அடிப்பதாக விமர்சனம் செய்வார்கள். அதனால், வாக்குப் பதிவு நிறைவு பெற்ற பின்னர் இன்று சிசிடிவி பதிவு வெளியிடுகிறோம்.
அதிகாரிகள் மீது நாங்கள் குற்றச்சாட்டு வைக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் ஆட்சியாளர்கள் மூலம் ஏவி விடப்படுகிறார்கள். உன்மையாக இருந்தால் பத்திரிகையில் வெளிப்படையாக கூறி இருக்கலாம். ஏன் கூறவில்லை?
நான் வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கிறேன். வருமான வரித் துறையினர் எத்தனை மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது, எத்தனை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வீட்டுகளில் சோதனை நடைபெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதன் மூலமாகவே, தமிழக வேட்பாளர்கள் மீது டெல்லி தலைமை காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.
மல்லிகர்ஜுனா கார்கே, வருமான வரித் துறையை சோதனையை கண்டித்து ”ஜனநாயக நாட்டில் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதும் ஒருவித தீவிரவாதம் தான்” என்று கூறியதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
சோதனை என்ற பெயரில் மக்களை அதிகாரிகள் அச்சுறுத்துவது என்பது மிகவும் மோசமானது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர், கண்டிப்பாக 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயு, நிதிஷ் குமார் ஆகியோர் தயாராக இருக்கின்றனர். ஒரு நிமிடத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.