செல்வப்பெருந்தகை
கடைசி நேரத்தில் கைகூடிய காங்கிரஸ் - திமுக கூட்டணி: பெரும்பாடுபட்டு சாதித்த பெருந்தகை
தமிழக அரசியலின் தட்ப வெப்பத்தையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்குப் போய்க்கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பஞ்சாயத்து ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், திமுக உடனான கூட்டணியை இழுத்துப் பிடித்து நிறுத்திய செல்வப்பெருந்தகையை அவரது ஆதரவாளர்கள் வட்டம் வெடிப்போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
திமுக தரப்புடன் நல்ல ‘டீலில்’ இருக்கிறார். இவர் தலைவராக இருக்கும் வரை காங்கிரஸை திமுக-வை விட்டு பிரிக்க விடமாட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடாமல் பாதுகாத்த விஷயத்தில் செல்வப்பெருந்தகை செம்மையாகவே செயல்பட்டிருக்கிறார்.
கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டவர்களின் உணர்ச்சி மயமான பேச்சுகளால் உடைந்துவிடுமோ கூட்டணி என கவலைப்பட்ட செல்வப்பெருந்தகை, பெங்களூருக்கே பறந்து சென்று கார்கேவை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு தான் மாணிக்கம் தாகூர் மவுனமானார்.
அதேபோல், தமிழகத்தில் ஒன்று பேசிவிட்டு டெல்லிக்குப் போனதும் “தவெக-வுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. திமுக கொடுக்கும் 25 தொகுதிகளுக்கு எல்லாம் சம்மதிக்க முடியாது” என பேட்டியளித்த கிரிஷ் சோடங்கரை சமாளிக்க ப.சிதம்பரத்தை உள்ளே இழுத்து வந்தார் செல்வப்பெருந்தகை.
இதற்கு நடுவே, “காங்கிரஸுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பில்லை” என்று திமுக திட்டவட்டமாகச் சொன்னதை எதிர்த்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்கத் தயாரானார் மாணிக்கம் தாகூர். அவரை கையெடுத்துக் கும்பிட்டு சமாதானம் செய்து, டெல்லிக்கு அனுப்பி வைத்தார் பெருந்தகை.
இதனிடையே, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் செல்வப்பெருந்தகையை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப் போகிறார்கள் என்ற செய்திகளும் பெருந்தகை வட்டாரத்தை பெரும் பீதியில் ஆழ்த்தின. இந்தக் குழப்பங்களால் தனது மகளின் நிச்சயதார்த்தத்தைக் கூட நிம்மதியாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் செல்வப்பெருந்தகை.
இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில் தான் ப.சிதம்பரத்தை கையோடு அழைத்து வந்து முதல்வரைச் சந்தித்துப் பேசவைத்தார். சிதம்பரம் பேசிய பிறகு, தொகுதிகள் எண்ணிக்கையை 25-லிருந்து 28 ஆக உயர்த்தித் தர சம்மதித்தது திமுக. எல்லாம் சுமுகமாக நடந்த பிறகும் செல்வப்பெருந்தகைக்கு நிம்மதி இல்லை. டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த கிரிஷ் சோடங்கர் கூடுதலாக எதையாவது பேசி குழப்பிவிடக் கூடாதே என்பதற்காக விமான நிலையத்திலேயே அவரை வரவேற்கக் காத்திருந்தார்.
ஆனால், "நேரடியாக அறிவாலயம் செல்லலாம்" என்று செல்வப்பெருந்தகை சொன்னதை ஏற்க மறுத்த சோடங்கர், "டெல்லியில் இருந்து உத்தரவு வரட்டுமே” என இழுத்தார். அதற்குள்ளாக, ‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்’ என செய்திகள் றெக்கை கட்டின. ஒருவழியாக சோடங்கரை சமாதானம் செய்து அறிவாலயம் அழைத்து வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட பிறகே நிம்மதியானார் செல்வப்பெருந்தகை.
ஒரு வழியாக தனது அசராத முயற்சியால் காங்கிரஸை திமுக அணிக்குள் நிறுத்திவிட்ட செல்வப்பெருந்தகைக்கு, காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள், அதில் யாருக்கெல்லாம் வாய்ப்பு என்று தீர்மானிப்பதிலும் அடுத்ததாக இன்னொரு அக்னிப் பரீட்சை காத்திருக்கிறது.
