

செல்வப்பெருந்தகை
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: "தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணி வலிமையாக இருப்பதால், தமிழக மக்கள் தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை பாஜக அரசு உணர்ந்துள்ளது. அதன் காரணமாகவே, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடாமல் வஞ்சித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தைப் புறக்கணிப்பதையே பாஜக வழக்கமாக வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘தமிழக முதல்வரே விசில் சின்னத்திற்குத் தான் வாக்களிப்பார்’ எனக் கூறியிருகிறார். கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஒருவர் பேசினால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 'இண்டியா கூட்டணி சிதறும்' என்கிறார். உண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வலிமையை இழந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. டி.டி.வி.தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன், அவரோடு இருந்தவர்கள் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் விலகவில்லை.
ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட புதிய கட்சிகளை இண்டியா கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதற்கு மக்கள் மீதான பயம் தான் காரணம் என்றார்.