

‘செங்கோட்டையனை கடுமையாகத் தாக்கிப் பேசிய செல்லூர் ராஜூ, உடனே என்னையும் அவரையும் வைத்து கார்ட்டூன் போடுவீர்கள் என்று செய்தியாளர்களுக்கு ஐடியா கொடுக்கும் வகையில் பேசினார்.
மதுரையில் செல்லூர் ராஜூ நேற்று கூறுகையில், ‘‘கருத்துக் கணிப்புகள் தற்போது அதிமுகவிற்கு சாதகமாக வருகிறது. இதைப் பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது. திமுக, அதன் கூட்டணி கட்சிகளை அடிமை போல் வைத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை பற்றி வாய்திறக்காமல் உள்ளனர். பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்கள்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சொதப்பலுக்கு தமிழக அரசே முக்கிய காரணம். வழித்தடம், எத்தனை இடங்களில் ஸ்டேஷன், எத்தனை லட்சம் பேர் பயன்பட போகிறாரகள் போன்ற புள்ளி விவரங்களை கொடுக்கவில்லை. மத்திய அரசு அதற்கான விளக்கம் கேட்டுதான் கடிதம் அனுப்பினார்கள். ஆனால், அதற்குள் ரத்து செய்ததாக திமுகவினர் வதந்திகளை பரப்பினார்கள்.
செங்கோட்டையன் செல்லாக் காசாகிவிட்டார். அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவரை எந்த கட்சியும் ஏற்றுக்கொள்ளாததால் வேறு வழியில்லாமல் தவெகவிற்கு சென்றுள்ளார். அதிமுகவில் தொண்டனுடைய ரத்தத்தையெல்லாம் உறிஞ்சிவிட்டு, சுகத்தை அனுபவித்துவிட்டு மாற்றுக் கட்சிகளுக்கு செல்வோரை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
ஊர் திருவிழாவில் காணாமல் போன ஆட்டை நாங்கள் தேடுவதில்லை. உடனே செங்கோட்டையனை செல்லூர் ராஜூ சாடல் என்று போட்டுவிடுவீர்கள். அவரையும், என்னையும் வைத்து கார்ட்டூன் போடுவீர்கள். சும்மா விடுங்க சார், ’’ என்று சொல்லி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.