மேலிடத் தலைவர்களை அழைத்து புதுச்சேரி தேர்தல் களத்தை அனலாக்கும் பாஜக - காங்கிரஸ்!
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தனது தேர்தல் பணிகளை தொடங்கி வேகமாக செய்து வருகிறது. வாரம் தோறும் ஒரு மத்திய அமைச்சர், தேசிய தலைவரை வரவழைத்து நிர்வாகிகள் கூட்டம், மக்கள் சந்திப்பு உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.
பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்பு படிவத்தை வடிவமைத்து வாகனங்களை அனுப்பி அதன் மூலம் கருத்துகளை கேட்டு வருகிறது. ஆனால் கூட்டணி கட்சியில் உள்ள என். ஆர்.காங்கிரஸ் தலைவரான முதல்வர் ரங்கசாமி எப்போதும் போல் அமைதியாக இருந்து வருகிறார்.
பாஜக தேர்தல் களத்தில் முழு வீச்சில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது. இது பற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, “என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வரும் தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான உத்தேச வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் மட்டுமன்றி கூட்டணிக் கட்சி தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதனை மையமாக வைத்தே முழுவீச்சில் இறங்கி தேர்தல் பணியாற்றி வருகிறோம். பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தர இருக்கின்றனர். அதன்பிறகு இன்னும் பலம் கூடும்’’ என்று தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் ஆளும் அரசின் குறைபாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி ‘வாக் ஃபார் புதுச்சேரி’ என்ற பாத யாத்திரையை நடத்தி அனலை கிளப்பி வருகிறது. இதுவரை அக்கட்சி 20 தொகுதிகளில் இந்த பாத யாத்திரையை நிறைவு செய்துள்ளது. அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கரே உள்ளிட்டத் தலைவர்கள் வந்து ஆலோசனைகளை வழங்கி விட்டு சென்றுள்ளனர்.
புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 21-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நடைப் பயணத்தைத் தொடங்கினர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும் இந்த நடைப் பயணம் திட்டமிடப்பட்டு, தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஏற்கெனவே அகில இந்திய காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் முக்கிய தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, கட்சியின் நிலைப்பாடு மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து மேலிடம் கேட்டறிந்தது
இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘வாக் ஃபார் புதுச்சேரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. திமுகவுடன் சுமூகமான கூட்டணி அமைந்து விடும். தலைமை இதற்காக பேசி வருகிறது. புதுச்சேரிக்கு அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தர இருக்கின்றனர். அதன்பிறகு இன்னும் கட்சியின் பலம் கூடும்’’ என்று நம்பிக்கையோடு பேசுகின்றனர்.
பிரதமர் மோடி 11-ம் தேதி பிரச்சாரம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிப்.11-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முதல்வர் ரங்கசாமியுடன் ஒரே மேடையில் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
