

மதுரை: எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், திமுக மூழ்கப்போகும் கப்பல் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டு துரைச்சாமி நகரில் பூங்கா சுற்றுச்சுவர், மேற்கூரை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் முடியும் வரை யாருக்கும் ஓய்வில்லை என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவர் யாருக்கு ஓய்வு என்கிறார் என்பது தெரியவில்லை. அதிகாரிகளுக்கா? கட்சிக்காரருக்கா? மதுரையில் ரூ.200 கோடி ஊழல் செய்துவிட்டு தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யலாமல் தொண்டர்கள் எப்படி உழைப்பார்கள்.
பொங்கலுக்கு ரூ. 3 ஆயிரம், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மக்களின் தேவையை நிவர்த்தி செய்யாமல் எப்படி செயல்பட முடியும். முதல்வர் எரிச்சலின் உச்சகட்டத்திற்கு போய் விட்டார். எங்களது பொதுச்செயலாளர் பழனிசாமி 10 தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது.
எத்தனை கூட்டணி சேர்த்தாலும் திமுக மூழ்கப்போகும் கப்பல். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கோட்டையை அடையும் கப்பல். ‘படகோட்டி’ படத்தில் எம்ஜிஆர் அணி வெற்றி பெறுவது போன்று, அதிமுக அணியே வெல்லும்.
இதனால் வருங்கால முதல்வராகும் எங்களது பொதுச்செயலாளரை பார்த்து தற்போதைய முதல்வர் எரிச்சல் அடைகிறார். இதன் காரணமாக அவர் மீது முதல்வர் ஸ்டாலின் கோபம் அடைகிறார். இது எங்களுக்கு பலமாக இருப்பதாகவே அர்த்தம்” இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.