

‘‘தங்கத்தைக் கொடுத்தாலும் திமுக-வுக்கு மக்கள் ஒட்டுப்போட மாட்டார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நேற்று, மதுரை மாநகர அதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜு கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மேயர், மண்டலத் தலைவர்கள், வரிவிதிப்புக் குழு உறுப்பினர், நகரமைப்புக் குழு தலைவருக்கு பதிலாக புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.
மக்கள் கோரிக்கைகளை பேசுவதற்கு 2 மாதமாக மாமன்றக் கூட்டத்தை நடத்த முன்வரவில்லை. கடந்த காலத்தில் நகரமைப்புப் பிரிவில் மிகப்பெரிய ஊழல், முறைகேடு நடந்துள்ளது. அதனால்தான் நகரமைப்புக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெரியாறு குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை. மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளரிடம் அனுமதி கேட்டுள்ளோம். மதுரை மக்கள் திமுக-வுக்கு எதிராக கொதித்துப்போய் இருக்கிறார்கள்.
என்ன தெம்பில் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் ஜெயிப்போம் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை; ஆச்சரியமாக இருக்கிறது. அவரது நம்பிக்கையான பேச்சை பார்க்கிறபோது, எதாவது மந்திரத்தில் மாங்காய் காய்க்கிறது மாதிரி நடந்துவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பணத்தைக் கொட்டி நகையாக கொடுக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், தங்கத்தைக் கொடுத்தாலும்கூட இந்த முறை மக்கள் திமுக-வுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
திமுக-வினர், வாயில் வடை சுடுவதில் வல்லவர்கள். தற்போது வாய்ப் பந்தலும் போட ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த நாலரை ஆண்டுகளில் மதுரைக்கு இவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள்? கோரிப்பாளையம் மேம்பாலம், மேலமடை மேம்பாலம் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவை.
மக்கள் வரிப்பணம் ரூ.68 கோடியை கொண்டு போய், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே விரும்பாத, ஆட்கள் நடமாட்டமே இல்லாத கீழக்கரையில் அவ்வளவு பெரிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டியது அவசியம்தானா?. யாரை திருப்திப்படுத்த இதை செய்கிறீர்கள். மக்களை முதலில் திருப்திப்படுத்துங்கள்.
திமுக ஆட்சி அமைந்தபோது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், இரண்டு மாதத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்கிவிடுவோம் என்றார். ஆட்சி முடியப் போகிறது பழனிவேல் தியாகராஜனுக்கு இன்னும் 2 மாதம் ஆகவில்லையா..? கனிமொழி எம்பி-யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளனர்.
அமைச்சர் நேரு இருக்கிற திருச்சியின் விமான நிலையத்தில் மிகப் பெரியளவில் மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளது. அந்த விமான நிலையங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே வருகிறது.
அப்படியானால் மதுரைக்கு மட்டும் எப்படி மத்திய அரசு முட்டுக்கட்டை போடும்? மதுரை மாவட்டத்திற்கு செய்வதற்கு தமிழக அரசுக்கு மனசு இல்லை. அதை கேட்டுப் பெறுவதற்கு உள்ளூர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆளுமை இல்லை. இவர்களால் மதுரை மாவட்டமும், அதன் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.