

சென்னை: இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்ததுடன் அதன் வாக்கு வங்கியும் 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைந்தது. காரைக்குடியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டெபாசிட் இழந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக கூட்ட ணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக, ஆளுங்கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகிறது.
இதன் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் பணிகளை தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையா, இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த தவெக வேட்பாளர் என மூவருமே தற்போது தவெக அணியில் உள்ளனர். மேலும், இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர் கணிசமாக வசிப்பதைக் கணக்கில் கொண்டு, அதே சமூகத்தைச் சேர்ந்த சீமானை பொதுவேட்பாளராக நிறுத்த திமுக காய் நகர்த்தி வருகிறது. சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடமும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அம்பாசமுத்திரத்தில் சீமானை வெற்றி பெறச்செய்து சட்டப்பேரவைக்குள் அனுப்பினால், அது முதல்வர் விஜய்க்கும், தவெகவுக்கும் சட்டப்பேரவையில் கடுமையான அரசியல் நெருக்கடியை கொடுக்கும் எனவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் மேலும் வலுப்பெறும் என திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, எங்கள் தரப்பில் யாரிடமும் பேச்சுவார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. அடுத்த சில நாட்களில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் எனத் தெரிவித்தனர்.