கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை என கோவையில் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு செல்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜன.6) மாலை கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் எனக் கேட்கின்றீர்கள். நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள் முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள். பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம். வீடுகள் எல்லாம் இருட்டிலா உள்ளது?
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் என்பது சீமானுக்கு அரசியல் பிழைப்பு என்று சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். உயிரோடு இருப்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் அளிக்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.