புதுடெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, அதன் இந்து விரோத மனப்பான்மையை பிரதிபலிப்பதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மற்ற மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி, கேலி செய்து, தாக்கி வருகின்றனர். இவை தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அல்ல.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என்று கண்டிக்கத்தக்க ஒரு விஷயத்தை உதயநிதி ஸ்டாலின் மிகவும் துணிச்சலாகப் பேசினார். அதன்பிறகு, முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் முயற்சி முதன்முறையாக தடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக முருகப் பெருமானை வணங்கி தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிச.4-ம் தேதி தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநில அரசு இந்த மரபுகளைக் கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக பக்தர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்கினார். தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கத்தை தொடர அவர் அனுமதி அளித்தார்.
ஆனால், நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்தது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது இந்து தர்மத்துக்கு எதிரானது; சனாதன தர்மத்துக்கு எதிரானது. பாரபட்சமானது. திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மையை இது தெளிவாகக் காட்டுகிறது.
உண்மையில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக, இண்டியா கூட்டணி ஆகியோரின் வெறுப்புணர்வையே இது காட்டுகிறது’’ என குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு இன்று உறுதிப்படுத்தியது. தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை இதற்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.