

சீமான் - கோப்புப் படம்
மதுரை: தமிழகத்தில் நடக்கும் தவறான ஆட்சிக்கு ஆட்சியாளரை தேர்ந்தெடுத்த மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என, மதுரையில் சீமான் கூறினார்.
சென்னையில் இருந்து ஈரோடு செல்ல விமானம் மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டம் நடத்துகின்றனர்.
இக்கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கைகள் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இது போன்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருக்கிறார். நான் அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பங்கேற்கிறேன். ஓய்வூதியத்துக்குப் பயந்து பணி நிரந்தரம் செய்யாமல் ஆசிரியர்களை ஒப்பந்தம், பகுதி நேர பணியில் வைத்துள்ளனர்.
அரசு நிர்வாகத்தை முறையாக செயல்படுத்தவில்லை. ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக அதிகரித்தது ஏன். ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் கொடுக்க உங்களிடம் நிதியில்லை. இது போன்ற சூழலில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு போக முடியவில்லை. அரசுப் பணியென எதுவுமின்றி எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். தூய்மைப் பணிகளும் தனியார் முதலாளிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது அரசு தான். தனியார் முதலாளிகள் லாபமின்றி எதையும் செய்வதில்லை. தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆந்திரா முதலாளிகளுக்கு என்ன ஆசையா?
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்த தொகை ரூ.7500 கோடி என்ன ஆனது. இதைக் கேட்டு எத்தனை முறை போராடினார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நாங்கள் வந்தவுடன் நிறைவேற்றுவோம் எனச் சொல்கிறீர்கள். ஆளுங்கட்சியாக வந்தபிறகு தூக்கி தூரப் போடுகிறீர்கள். தவறான ஆட்சி நடக்குது என்றால் அதற்கு ஆட்சியாளர் பொறுப்பல்ல. ஆட்சியாளரை தேர்ந்தெடுத்த மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் அதிக இடங்களை வென்று இருந்தாலும், நம்ம ஊர் அரசியலைப் பேசவேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கியத் தலைவர்களை தவெக பக்கம் கொண்டு வந்து, அக்கட்சியை வலுப்படுத்துவேன் என, செங்கோட்டையன் கூறுவது குறித்து செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே “கல்யாணத்துக்கு செல்கிறேன்” எனக் கடந்துவிட்டார்.