

புதுச்சேரி: புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அரசியல் மாநாடு மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: இதுவரை புதுச்சேரி, தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கோட்பாடு, நிலைபாட்டில் முற்றிலுமாக எங்கள் கட்சி தத்துவமும், கோட்பாடும் மாறுகிறது. இவர்கள் ஊழல், லஞ்சம். நாங்கள் உண்மை, நேர்மை.
நாங்கள் மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவோம். அவர்கள் ஓட்டை பற்றியே கவலைபடுவார்கள், நாங்கள் நாட்டை பற்றி கவலைப்படுவோம்.
எல்லாவற்றுக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம். இலவசம் பெறவேண்டிய ஏழ்மை, வறுமை இல்லாமல் எமது மக்களை உயர்த்த வேண்டும் என்பது எமது கடமை.
படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவரே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இலக்கு. ஆணும், பெண்ணும் சமம். இந்திய கட்சிகளின் மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. இருமொழி கொள்கை ஏமாற்றுக் கொள்கை. கொள்கை மொழி தமிழ். தமிழ் பயிற்று மொழி. ஆங்கிலம் கட்டாய பாடமொழி. பயன்பாட்டு, தொடர்பு மொழி. இதுதான் எங்கள் கோட்பாடு.
இதுவரை இந்த மாநிலத்தில் இருந்த அரசியல் அடித்தளத்தை நாம் தமிழ் கட்சியின் கோட்பாடும், தத்துவமும் தகர்க்கிறது. ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் தொடர்ந்து நடக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் தொடர்கிறது. ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் கோட்பாடு. இவ்வாறு சீமான் பேசினார்.