எனது கனவு திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவது தான்: சீமான் சீற்றம்

எனது கனவு திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவது தான்: சீமான் சீற்றம்
Updated on
1 min read

“தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், அதுகுறித்து கேட்காமல், உனது கனவு என்ன என்று கேட்கின்றனர். எனது கனவு திமுக-வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதுதான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நாதக வேட்பாளர் எழிலரசியை ஆதரித்தும், ஆலங்குடியில் ஆர்.ராஜாராமை ஆதரித்தும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். முன்னதாக, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தொகுதி மறுவரையறை, வாக்காளர் சிறப்பு திருத்தம் போன்ற செயல்களை அவசரமாக கொண்டு வந்து, மக்களை பதற்றமான நிலைமைக்கு வைத்திருப்பது பாஜக-வுக்கு வாடிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்வதை ஏற்க முடியாது. திமுக-வுக்கும், தவெக-வுக்கும் தான் போட்டி என்று பேசும் தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரத்துக்குச் செல்லாமல், நான் போட்டியிடும் காரைக்குடிக்குத் தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்.

அப்படியென்றால் ஊழலை ஒழிப்பேன் என்று ஆவேசமாக பேசும் விஜய், யாரை போட்டியாளராக பார்க்கிறார்? தமிழினத்தை மற்ற கட்சியினர் ஆள நினைக்கிறார்கள். நான் அவர்கள் வாழ நினைக்கிறேன். இலவச திட்டங்கள் என்பது ஏமாற்று வேலை. அதனால் தான் இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பட்டுக்கோட்டை வேட்பாளர் கண்ணன், பேராவூரணி வேட்பாளர் புவனா ஆகியோரை ஆதரித்து பட்டுக்கோட்டை தபால் நிலையம் முன்பு பேசிய சீமான், “நாதக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து, அவர்களது பரிந்துரைப்படி அரசே விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கும். மக்களுக்கு நீர், உணவு ஆகியவையே முக்கியம். இதற்கான பொருளாதார கட்டமைப்பை நாதக அவசியம் கொண்டு வரும்.

திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக, நிறுவனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகன் என்பதைவிட வேறு தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், அதுகுறித்து கேட்காமல், உனது கனவு என்ன என்று கேட்கின்றனர். எனது கனவு திமுக-வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதுதான். எனவே, இந்த முறை தேர்தலில் நாதக-வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

எனது கனவு திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவது தான்: சீமான் சீற்றம்
இந்துக்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in