

“அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு அஞ்சுபவர் புரட்சியாளனாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்கூடாது. பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் எழும்பூர், மயிலாப்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் தொகுதிகள் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால், ஆட்சி முறை மாறவில்லையே. அன்று அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி இரண்டு ரூபாய் கொடுத்தது. இன்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து ரூ.2 ஆயிரம் கொடுக்கின்றனர். ஜனநாயகத்தின் வலிமைமிக்க ஆயுதம் வாக்கு. அதை விற்கிறீர்கள் எனில் எங்கே இருக்கும் மக்களுக்கான அதிகாரம்?” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்களுக்கு வரும் கூட்டம் எங்களை பார்ப்பதற்காக வருவதில்லை. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை கேட்க வருகின்றனர். விஜய் வந்ததால் நாங்கள் பின்னுக்கு தள்ளப்படுவோம் என்கின்றனர். நாங்கள் ஒன்றும் ஆட்டுக்கல் அல்ல, பின்னுக்குத் தள்ளிவிட்டு செல்வதற்கு. விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் விஜய் நிற்காத நிலையில் அவரது வாக்குகளில் கொஞ்சமாவது எனக்கு விழுந்திருந்தால் 10 அல்லது 15 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றிருக்க மாட்டேனா? எனக்கு வாக்கு செலுத்தியவர்கள் ரசிகர்கள் அல்ல.
விஜய் பிரச்சாரம் செய்வதற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறுகின்றனர். நான் சந்திக்காத நெருக்கடிகளா? 260 வழக்குகளுக்கு மேல் வாங்கியிருக்கிறேன். நான் ஏறாத நீதிமன்ற படிக்கட்டு இல்லை. செல்லாத சிறையும் இல்லை. அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு அஞ்சுபவர் புரட்சியாளனாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்கூடாது. பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. மீறி வந்து பிரச்சாரம் செய்தால் என்ன செய்வார்கள்? வழக்குத்தானே போடட்டும். தடை அதை உடை அவ்வளவுதான். நெருக்கடிகளை தாண்டித் தான் வெல்லவேண்டும்.
காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது. ஓட்டும் கிடையாது என எம்பி-யான கார்த்தி சிதம்பரம் கூறுகிறார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டனர். அவர்களுக்கு அங்கு வீடு இருந்ததா? ஓட்டு இருந்ததா? இதே காங்கிரஸ் கட்சி தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருத்தரை மேலூர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.