

சீமான்
மதுரை: எங்களுக்கு கோட்பாட்டு எதிரி இந்தியும், திராவிடமும் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த சவுராஷ்டிரா அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து விமான மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நீண்ட காலமாக கோரிக்கை வைத்து ஆசிரியர்கள் போராடுகின்றனர். 14,000 மேற்பட்ட ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று காத்திருக்கின்றனர். ஆட்சியே முடிந்துவிட்டது.
மறுபடியும் அந்த கோரிக்கையை வைத்து போராடுகின்றனர். ஆசிரியர் உள்ளிட்ட அனைவரையும் தெருவில் நிறுத்திவிட்டு நல்லாட்சி என்றால் எப்படி. உதவி பேராசிரியர் தேர்வில் முதல்வர் காலை உணவுத் திட்ட கேள்விக்கு தாக்கம் இல்லை என சொன்னால் என்னை தேர்ச்சி பெறவிட மாட்டீர்கள். மாற்றி எழுதினால் என்னைத் தேர்வு செய்து வேலைக்கு சேர்ப்பீர்கள்.
பொங்கல் பரிசு தொகைக்கு உங்கள் சொத்தை விற்று கொடுக்கிறீர்களா? ரூ. 10 லட்சம் கோடி கடனுக்கு விளக்கம் சொல்ல முடியுமா? கடனை வாங்கி கொடுத்துவிடுவீர்கள். ஒருவரின் தலையைில் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. பொங்கல் கொண்டாட முடியவில்லை. அந்தளவுக்கு ஏழ்மை நிலையில் எங்களை வைத்திருக்கிறீர்கள். பொங்கலுக்கு பரிசு என்பது ஓட்டை பறிக்கும் வேலை. நாட்டை காப்பாற்ற அல்ல.
விளை நிலங்களை பறித்து தொழிற்சாலை தொடங்கினால் சாப்பாடு எங்கிருந்து வரும். சிப்காட் தொழிற்சாலைக்குள் ஊடகம் செல்ல முடியுமா? 26 கிலோ மீட்டர் தண்ணீர் கெட்டு விட்டதாக சொல்கின்றனர். அரசிடம் தனியார் முதலாளி கடன் கேட்கலாம். அரசு தனியார் முதலாளியிடம் வண்டி கேட்கிறது.
தமிழ்நாடு போக்குவரத்தில் மட்டும் இல்லை. கருணாநிதி இருந்தபோது, சேரன், சோழன், பாண்டியன் என இருந்தது. அதையெல்லாம் தூக்கிவிட்டு, தமிழ்நாட்டையும் தூக்கிவிட்டு அரசு பேருந்து என உள்ளது. அரசு பள்ளி என்று தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளி, பேருந்து, விடுதி என்று இல்லை. டாஸ்மாக்கில் மட்டும் தமிழ்நாடு என உள்ளது. தமிழ்நாடு என்று இருப்பது உங்களுக்கு அவமானமாக உள்ளது. வேண்டுமென்றால் திராவிட அரசு என போட்டுக் கொள்ளுங்கள்.
நான்காம் தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரையிலுள்ள நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? காளை வளர்த்தாரா, அடக்கி காயம் பட்டாரா? அங்கு மைதானம் கட்டியதற்கு கலைஞர் பெயர் வைத்திருகின்றனர். மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கக் கூடாதா? எங்கள் அடையாளங்களை நிறுவி உங்கள் அடையாளத்தை அழிப்பதில் என்ன தவறு.
வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நல்ல எதிரிவேண்டும். எல்லோரையும் எதிர்க்க முடியாது என விஜய் பேசி இருப்பது சரிதான். அவர் ஒரு எதிரியை தீர்மானித்து வைத்திருக்கிறார். எங்களுக்கு கோட்பாட்டு எதிரி இந்தியும், திராவிடமும் தான். விஜயின் எதிரியை அவரிடமே கேளுங்கள். 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறேன். எனக்கு எந்த கட்சி கூட்டணியும் தேவையில்லை” இவ்வாறு சீமான் கூறினார்.