

கடந்த மாதம் 28-ம் தேதி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், தமிழ்க்குமரனை பாமக-வில் இருந்து நீக்குவதாக கடந்த 29-ம் தேதி அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் தமிழ்க்குமரன் இணைந்த போதே, அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்க்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சியில் இணைந்த ஒரே வாரத்துக்குள் தமிழ்க்குமரனுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது, காங்கிரஸ் கட்சியில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.
ராமதாஸ் ஆதரவாளராகவும், தற்போது பென்னாகரம் எம்எல்ஏ-வாகவும் இருக்கும் ஜி.கே.மணி, ராமதாஸே சொன்னாலும், இந்த முறை பென்னாகரம் தொகுதியில் மகனுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், தமிழ்க் குமரனை காங்கிரஸில் இணைத்து பென்னாகரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கச் செய்ததில் திமுக-வின் பங்கு அதிகம் எனவும் அதன் பின்னணியில் ஜி.கே.மணி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக பாமக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பாமக அன்புமணியின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. இனிமேல், ராமதாஸ் கூட இருந்தால் ஒன்றும் நடக்காது என்பது ஜி.கே.மணிக்கு தெரியும். ஏற்கெனவே, ஜி.கே.மணி திமுக-வுடன் நல்ல நட்புறவில் உள்ளார்.
தனது மகன் தமிழ்க்குமரனின் அரசியல் எதிர்காலத்தை கருதி, திமுக மூலமாக காங்கிரஸில் தனது மகனை சேர்த்து தனது பென்னாகரம் தொகுதி சீட்டையே வாங்கிவிட்டார். திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தமிழ்க்குமரன் இருப்பதால், அந்த லைனில் இருக்கும் திமுக-வினரும் தமிழ்க்குமரனுக்கு சீட் கிடைக்க உதவி செய்துள்ளனர்.
பென்னாகரம் தொகுதியில் மகனை எதிர்த்து ஜி.கே.மணி போட்டியிடப்போவதில்லை. ராமதாஸும் பென்னாகரம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு இல்லை” என்றனர்.