

கோப்புப் படம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில், இண்டியா கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.
புதுவையில் 30 சட்டசபை தொகுதிக்கு கடந்த 16-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் 2 நாட்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதையடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்று முடிந்தது. அதற்கு முன்பாகவே என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பலர் மனு தாக்கல் செய்தனர். பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். பாஜக, அதிமுக, லஜக தரப்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்கின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் மனு தாக்கல் செய்தனர்.
அதேநேரத்தில் இண்டியா கூட்டணி காங்கிரஸ் - திமுக இடையே இழுபறி நீடிக்கிறது. எனினும் இக்கட்சியினர் முன்பாகவே பல தொகுதிகளில் அவர்களாகவே மனு தாக்கல் செய்து வருகின்றனர். இரு கட்சியினர் இடையே அதிக தொகுதி மற்றும் தலைமை யார் என்பதில் தொடரும் பிரச்சினையே இந்த இழுபறிக்கு காரணம்.
இரு கட்சிகளின் தலைமையும் இதில் தலையிட்டு இண்டியா கூட்டணி பங்கீடு இன்று முடியும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு விடுமுறை என்றும் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் கடைசி நாளான 23-ம் தேதி மட்டுமே வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய முடியும். மாஹே தொகுதியில் மட்டும் இன்று மனு தாக்கல் செய்யலாம்.
முக்கியக் கூட்டணிகளில் வாய்ப்பு கிடைக்காதோர் சுயேட்சையாகவும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் மனுவுடன் பல்வேறு முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வருவாய் துறையில் சாதி சான்றிதழ், வரி நிலுவையில்லா சான்று, உள்ளாட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, மின் துறையில் கட்டண பாக்கி இல்லை என்பதற்கான தடையில்லா சான்று மற்றும் போலீஸில் வழக்கு ஏதும் இல்லா சான்றிதழ் என பல சான்றிதழ்கள் இணைக்க வேண்டும் என்பதால் பலரும் அதை தயார் செய்வதில் மும்முரமாகவுள்ளனர். வரும் திங்களன்று அதிகளவில் பலரும் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் இண்டியா கூட்டணியில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது.